விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் கருப்புப் பெட்டியை காணவில்லை

கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி இன்று மீட்கப்பட்ட நிலையில் இந்த விபத்தைப் பற்றிய மர்மத்தை பதிவு செய்து வைத்திருக்கும் கருப்புப் பெட்டியை காணவில்லை என தெரியவந்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம் கடந்த மாதம் 28–ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது.

இதையடுத்து, பல நாடுகளுடன் கைகோர்த்து இந்தோனேஷிய அரசு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது. இந்த தேடுதல் வேட்டையில் சமீபத்தில் அவ்விமானத்தின் வால் பகுதி விழுந்துக்கிடந்த இடம் கண்டறியப்பட்டது.

விமானத்தின் வால் பகுதியில் தான் கருப்பு பெட்டியும் இருக்கும் என்பதால் அதில் கருப்பு பெட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  ரிமோட் மூலம் இயக்கப்பட்டு, கடலுக்குள் சென்று புகைப்படம் கருவியை வைத்து இந்தோனேஷிய மீட்பு குழுவினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் கருப்பு பெட்டியை தீவிரமாக தேடி வந்தனர்.

விமானத்தின் வால் பகுதி கிடைத்த இடத்திற்கு அருகே கருப்பு பெட்டியிலிருந்து வரும் அதிர்வலைகள் உணரப்பட்டதாக தேடுதல் அதிகாரி சுப்ரியாடி தெரிவித்திருந்தார். நீர்மூழ்கி மூலம் அப்பகுதியில் நீச்சல் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன் விளைவாக, கடலின் அடியில் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் மூழ்கியிருந்த விமானத்தின் வால்பகுதியை இன்று மீட்ட வீரர்கள் அதனை கடலின் மேல்பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்தனர். மிதவை பைகள் மற்றும் ‘கிரேன்’ உதவியால் மீட்கப்பட்ட வால்பகுதி நீரின் மேற்பரப்பில் நின்றிருந்த மீட்பு கப்பலில் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டது.

அதில் உள்ள கருப்பு பெட்டியை கைப்பற்றினால் 162 உயிர்களை பலி வாங்கிய அந்த கோர விபத்துக்கு என்ன காரணம்? என்ற மர்மம் விலகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட வால் பகுதியில் இருக்க வேண்டிய கருப்புப் பெட்டியை காணவில்லை என மீட்புப் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடலின் அடிப்பகுதியில் அது புதைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. மாயமான கருப்புப் பெட்டியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஏசியாஏர்கடல்கண்டுகருப்புகாணவில்லைபகுதிபிடிப்புபெட்டிவால்விமானம்விழுந்த
Comments (0)
Add Comment