எப்-16 போர் விமானங்கள் வாங்குவதற்கு முழு தொகையையும் செலுத்த வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு எட்டு ‘எப்–16’ ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்காவின் ஒபாமா அரசு முடிவு செய்தது.
இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மாவை நேரில் வரவழைத்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இந்தியாவின் எதிர்ப்பை முறைப்படி பதிவு செய்தார். ஆனாலும் இந்தியாவின் எதிர்ப்பை மீறி, பாகிஸ்தானுக்கு அந்த விமானங்களை விற்பனை செய்வதற்கு ஒபாமா அரசு முடிவு செய்தது. இது குறித்து முறைப்படி, அமெரிக்க அரசு அறிவிக்கையும் வெளியிட்டது. இதற்கு பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய விலை 700 மில்லியன் டாலர் ஆகும்.
இதற்கிடையே அரசின் இந்த முடிவிற்கு அமெரிக்காவின் செனட்டர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் வரிப்பணத்தை பாகிஸ்தானுக்கு மானியம் வழங்க பயன்படுத்தக்கூடாது என்று கூறி இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். கடந்த வாரம் நடந்த விவாதத்தின்போது பேசிய எம்.பி.க்கள், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக இந்த எப்–16 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுவதை விட இந்தியா மற்றும் பிற பிராந்திய நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து போர் விமானங்களை வாங்க வேண்டுமென்றால் முழு தொகையையும் செலுத்தவேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியுள்ளது. “போர் விமானங்கள் விற்பனை செய்வதற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டபோதும், அதற்காக அமெரிக்கா அளிக்கும் ராணுவ நிதி உதவியை பயன்படுத்துவதற்கு முக்கிய உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். எனவே, இந்த விஷயத்தில் பாகிஸ்தான் தேசிய நிதியின் மூலம் போர்விமானங்களை வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளோம்” என அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஆனால், இதுபற்றி எப்போது முடிவு எடுத்து எப்போது பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டது? என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.