எகிப்தில் 149 பேருக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் இரத்து செய்துள்ளது.
2013ஆம் ஆண்டு முஹம்மது முர்ஷியை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கி விட்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதன்போது இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் அந்நாடு முழுவதும் கலவரம் பரவியது. தலைநகர் கெய்ரோவில் போராட்டக்காரர்களின் முகாம்களுக்குள் புகுந்த பொலிஸார், எதிர்த்து நின்ற 700க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த முர்ஸியின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் வன்முறை கும்பலைச் சேர்ந்த 149 பேருக்கு மரண தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்புக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, மனித உரிமை ஆர்வலர்கள் சார்பில் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்பை முழுமையாக இரத்து செய்துள்ளது. பொலிஸாரின் அராஜகம் காரணமாகவே வன்முறை நிகழ்ந்திருப்பதால், இவ் வழக்கை மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.