2016ல் ரோம் நகரில் அன்னை தெரஸாவுக்கு “புனிதர் பட்டம்’ வழங்கப்படுகிறது

கொல்கத்தாவில் 45 ஆண்டுகளாக ஏழைகளுக்காகவும், தொழுநோயாளிக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்து சேவை செய்த அன்னை தெரஸாவுக்கு, அடுத்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் ரோமன் கத்தோலிக்க திருச்சபை, “புனிதர்’ என்ற பட்டத்தை வழங்கி கெளரவிக்கவுள்ளது.

  தெரஸா மறைந்த பிறகும் அவர் அற்புதங்களை நடத்தி வருகிறார் என்று அறிவித்து, இந்தப் பட்டம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அன்னை தெரஸாவினால், கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’யின் செய்தித் தொடர்பாளர் சுனிதா குமார், பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸாவுக்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபை, “புனிதர்’ பட்டத்தை வழங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, வாடிகன் தேவாலயத்தில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளோம்.  இந்த அறிவிப்பால் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் அவர்.

 புனிதர் பட்டம் எப்போது? இதுகுறித்து “அவினியர்’ என்ற கத்தோலிக்க செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளதாவது: மூளையில் ஏற்பட்ட பல்வேறு கட்டிகளால் (பிரையன் டியூமர்) பாதிக்கப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர், தெரஸாவின் அப்போதைய பிரார்த்தனைகளால் தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த 3 நாள்களுக்கு முன்பு நிபுணர் குழுவினர் ஒன்று கூடி பிரேசில் சம்பவம் “தெரஸாவின் இரண்டாவது அற்புதம்’ என்று முடிவு செய்தனர்.

 அதன் பின்னர் அந்தச் சம்பவம் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய போப் ஆண்டவர் பிரான்சிஸால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி ரோம் நகரத்தில் நடைபெறவுள்ள போப் ஆண்டவரின் 50-ஆவது ஆண்டு விழாவில் அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அந்த செய்தித் தாளில் கூறப்பட்டுள்ளது.

 முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தாவில் “முதல் அற்புதம்’ நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது நடைபெற்ற பிரேசில் சம்பவம் இரண்டாவது அற்புதமாக கருதப்படுகிறது.

 புனிதர் பட்டம் வழங்குவதற்கு குறைந்தது 2 அற்புதங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் நடைமுறையாகும். இதற்கு முன்னர், கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால், 3 லட்சம் புனித யாத்ரீகர்கள் முன்னிலையில் தெரஸாவுக்கு முத்திப்பேறு பட்டம் வழங்கினார்.
புனிதர் பட்டம் வழங்குவதற்தான முதல் படி முத்திப்பேறு பட்டமாகும்.

 வாழ்க்கை வரலாறு : அன்னை தெரஸா 1910-இல், அல்பேனியாவில் பிறந்தார்.  இந்தியாவுக்கு வந்து, கொல்கத்தாவில் அறக்கட்டளையை தொடங்கி ஏழைகள், ஆதரவற்றவர்கள், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு 45 ஆண்டுகளாக சேவைகளை செய்து வந்தார்.  இந்நிலையில் 1951-ஆம் ஆண்டு அவருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டது. கடந்த 1997-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தன்னுடைய 87-ஆவது வயதில் அவர் மறைந்தார். அவரது இறுதிச் சடங்கு மேற்கு வங்க மாநில அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

அன்னை தெரஸாபுனிதர் பட்டம்போப் ஆண்டவர்ரோம்வாடிகன் தேவாலயம்
Comments (0)
Add Comment