ஜனாதிபதி செயலகத்தின் செலவை பாதியாக குறைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 1200 ஆக காணப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை 600ஆக குறைக்கப்பட்டுள்ளதோடு, வாகனப் பயன்பாடு 75 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாதாந்தம் 100 மில்லியனை ரூபாவினை மீதப்படுத்த முடிவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாட்டிற்கு எதிராக மிகப்பெரிய ஆபத்து காத்திருந்ததாகவும், எனினும் ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அதனை இல்லாது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் செயற்படவில்லை, அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், எனினும் பல்வேறு விடயங்களை செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 40 வருடங்களாக இழுபறியில் இருந்த தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு மேலும் பல சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றும் தனது சகோதரரான குமாரசிங்க சிறிசேன ஒரு கோடி சம்பளமாக பெற்றுக்கொள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜனாதிபதி, முன்னாள் தலைவர் பெற்றுக்கொண்ட ஊதியத்தைவிட ஒரு ரூபாவேனும் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.