கல்வி, வேலைவாய்ப்பில் சட்ட ரீதியில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மேலாக, குஜ்ஜார் உள்பட 5 சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா கொண்டு வரப்படும் என மாநில அரசு உறுதியளித்தது. இதனையடுத்து, எட்டு நாட்களாக தொடர்ந்தபோராட்டம் நேற்று இரவுமுடிவுக்கு வந்தது.
ராஜஸ்தானில் இடஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் சமூக மக்கள், கடந்த 21ஆம் தேதி முதல் ரயில் மறியல், சாலை மறியல் என பல்வேறு நிலைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மக்கள் போராட்டத்தினால் தில்லி-மும்பை வழித் தடத்தில் ரயில் சேவையும், ஆக்ரா-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சேவையும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ரயில்வே துறைக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதனிடையே, குஜ்ஜார் சமூகத்தினரிடம் மாநில அரசு இருமுறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அதன்பின் ஜெய்ப்பூரில் குஜ்ஜார் சமூகத் தலைவர்களுடன் மாநில சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் ராஜேந்திர சிங் வியாழக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் முடிவில் சட்ட ரீதியில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மேலாக, குஜ்ஜார் உள்பட 5 சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா கொண்டு வரப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
தங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட மாநில அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், போராட்டத்தின்போது இடையூறு ஏற்பட்டதற்காக பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், குஜ்ஜார் இடஒதுக்கீட்டு போராட்டக் குழுவின் தலைவர் கிரோரி சிங் பைன்சலா கூறினார். இதற்கிடையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜனநாயக விரோதமாகப் போராடி வரும் குஜ்ஜார் சமூக மக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து மாநில அரசுக்கும், காவல் துறைக்கும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த மக்கள்தொகையில் 7 சதவீதம் உள்ள குஜ்ஜார் சமூகத்தினர், 2006ஆம் ஆண்டு முதல் இடஒதுக்கீட்டு கேட்டு போராடி வந்தனர். இதுதொடர்பாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.