இந்நிலையில், மீதமுள்ள 34 உள்ளூராட்சி சபைகளினதும் ஆயுட்காலம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 மற்றும் 31ஆம் திகதிகளுடன் நிறைவடையவுள்ளது. ஆகவே, இவற்றுக்கான தேர்தல்களை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்த போதிலும், புதிய தேர்தல் முறையினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அல்லது அதற்கு முன்னர் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன.
அரசு தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளமையால் அதற்கான எல்லை நிர்ணய வர்த்தமானி வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எல்லை நிர்ணய வர்த்தமானி வெளியான ஆறு மாதங்களின் பின்னரே உள்ளூராட்சி சபைளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது உள்ளூராட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஜனாதிபதியிடம் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி சிறிசேன, வரும் மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன எனவும், நவம்பர் மாதத்தில் வரவு -செலவு திட்டம் முன்வைக்கப்பட உள்ளமையால் இவ்வருடத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்துவது கடினமான ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.