ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் எபோலா நோயாளிக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியருக்கு அந்நோய் பரவியது குறித்து ஐரோப்பிய யூனியன் அந்நாட்டு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
எபோலா நோயால் மேற்கு ஆப்பிரிக்காவில் 3,400 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஸ்பெயினிலிருந்து ஆப்பிரிக்காவில் மதப் பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற இரு கிறிஸ்தவ பெண் துறவிகள் எபோலா நோயால் பீடிக்கப்பட்டு நாடு திரும்பினர். இவர்கள் மாட்ரிட் நகரில் ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த செவிலியருக்கு இந்நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ கவனக் குறைவே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஸ்பெயின் அரசிடம் விளக்கம் கேட்டு ஐரோப்பிய யூனியன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஐரோப்பாவுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது