19வது அரசியலமைப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளிக்காவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்று சபை கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 19வது அரசியலமைப்பை எதிர்ப்பதற்கான வாய்ப்பு காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காவிட்டால் அக்கட்சி அரசியலமைப்பிற்கு எதிராக வாக்களிக்கும் சூழ்நிலை காணப்படுவதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
குறித்த கட்சி உறுப்பினர்கள் சிலர் மகிந்த ராஜபக்சவுடன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு மறைமுக மற்றும் நேரடியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கில் 19வது அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருடன் இணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.