மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வினை குறைக்கவோ கட்டுப்படுத்தவோ அரசாங்கத்திற்கு எவ்வித அவசியமும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபை தேர்தல்களின் பின்னர் பொருட்களுக்கான விலைகளை உயர்த்துவதனை அரசாங்கம் வழமையாக்கிக்கொண்டுள்ளது. மத்திய, வடமத்திய, தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னரும் வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளது. மக்களின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை. எனினும் பொருட்கள் சேவைகளுக்கான செலவுகள் பாரியளவில் உயர்வடைந்தள்ளது.
தேர்தலில் தோல்வியைத் தழுவக்கூடம் என்ற அச்சத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் அரசாங்கம் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. எது எவ்வாறு இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.