Designed by Iniyas LTD
அனைத்துத் தமிழ் மக்களும் தவறாது வாக்களிக்க வேண்டும் – மாவை
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைக் குழப்பும் நோக்கிலும் வாக்களிப்பைத் தடுக்கும் நோக்கிலும் ஆளும் தரப்பு சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலைப் புறக்கணிக்கிறது. மக்கள் வாக்களிக்க வேண்டாம் எனத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்கள் நள்ளிரவு தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வீடுகளில் போடப்பட்டன. சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த துண்டுப் பிரசுரங்களுடன் ஆளும் தரப்பின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்களும் வீதிகளில் இறைந்து கிடக்கின்றன.
இதற்கிடையில் விடுதலைப் புலிகளிகளின் பெயராலும், முன்னாள் போராளிகளின் பெயராலும் தேர்தலை புறக்கணிக்குமாறு வடக்கில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் எத்தகைய எதிர்ப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும் மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை உரியமுறையில் பயன்படுத்த வேண்டும் என சமூக அர்வலர்கள் கோரியுள்ளனர்.
இதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பொய்களை நம்ப வேண்டாம் என்றும் அனைத்துத் தமிழ் மக்களும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்றும் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.