Designed by Iniyas LTD
இந்திய மீனவர்களிற்கு எதிராக புதிய சட்டத்தின்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
இலங்கைக் கடலுக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் புதிய சட்டத்தின்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்குகள் யாழ் நீரியல்வளத் திணைக்களத்தால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக் கடலில் சட்டவிரோதமாக மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 12 பேர் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் மீதே முதன்முதலாகப் புதிய சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழமையாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது மாவட்ட நீரியல்வளத் திணைக்களம் முதல் அறிக்கையை சமர்ப்பித்து விளக்கமறியல் அனுமதியைப் பெறும்.
அதன்பின்னர் சட்டமா திணைக்களமே வழக்கைத் தாக்கல் செய்து நடத்தும்.
இந்த நிலையில் புதிய சட்ட ஏற்பாட்டின்படி நீரியல்வளத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்து நடத்தும்.
இதுவரை இந்தச் புதிய சட்டத்தின் மூலம் சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மட்டும் வழக்குத் தாக்கல் செய்யமுடியும் என்ற சட்ட ஏற்பாடு காணப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம் நீரியல்வள திணைக்களத்தினர் அந்தந்த மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யமுடியும் என சட்டம் கொண்டுவரப்பட்டது..
இதன்படி அனுமதி இன்றி நாட்டுக்குள் நுழைந்த குற்றச் நாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
அதனால் பல லட்சம் ரூபா தண்டம் செலுத்த நேரிடலாம் என்பதுடன், நீண்டகால சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.