தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை கொழும்பில் வித்தியாவுக்கு அரசின் ஏற்பாட்டில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி!

பாலியல் கொடூரத்துக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கொழும்பில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று நேற்று நடத்தப்பட்டுள்ளது.

jaffna girl

இலங்கை சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்கான அமைச்சகம் சார்பில் வித்தியாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளிலும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்த வித்தியாவுக்கு தங்களின் அஞ்சலியை செலுத்தினர்.

மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பலத்தரப்பினர்களும் பெண்களுக்கு எதிரான கொடூரங்களைத் தடுக்க நாட்டின் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான நீதி விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை மையப்படுத்தி, குறிப்பாக வடக்கில் நிகழ்ந்த கொடூரச் செயல் ஒன்றுக்காக அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கவனயீர்ப்பு நிகழ்வு நடந்துள்ளமை இதுவே முதல்தடவை என்று  மனித உரிமைகள் மற்றும் பால்சமத்துவம் தொடர்பான ஆர்வலர் நளினி ரட்ணராஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நளினி ரட்ணராஜா கடந்த ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும்போது, புதிய ஆட்சியின் கீழ் மக்கள் அச்சமின்றி சமூகப் போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய சூழல் நாட்டில் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments
Loading...