தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை நீதிமன்றத்துக்குள் சர்வதேச வழக்கறிஞர்கள் அனுமதிக்க முடியாது: அதிபர் சிறீசேனா

maithiri-balaபோர்க்குற்ற விசாரணையில் இலங்கை நீதிமன்றத்துக்குள் சர்வதேச வழக்கறிஞர்களை அனுமதிக்க முடியாது என இலங்கை அதிபர் சிறீசேனா கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.லட்சக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டனர். தமிழ்ப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடந்தன.

தமிழர்களை நிலை குலையச் செய்த இந்த போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்தி ராஜபட்ச உள்ளிட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையமும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றது. இதற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் சர்வதேச நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றை இலங்கை அமைத்து போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளும் ஏற்றுக் கொண்டதால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

இந்நிலையில், இலங்கையில் நடந்த போர்குற்றம் தொடர்பாக இலங்கையை அடக்கிய காமன்வெல்த் நாட்டு நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்கலாம் என அமெரிக்க தீர்மானத்தை உடனடியாக செயல்படுத்த முடியாது என இலங்கை அதிபர் சிறீசேனா கூறியுள்ளார்.

புதிய சர்வதேச நீதிமன்றம் ஒன்றை ஏற்றுக்கொள்வதற்காக அரசியலமைப்பில்; வழிசெய்யப்படாமல், இந்த விஷயத்தை முன்னெடுத்து செல்வது அரசியல் ரீதியாக கடினமானது என்று அதிபரின் உதவியாளர் ஒருவரும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை அதிபர் சிறிசேனா மேலும் கூறுகையில், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள், இலங்கையின் நீதித்துறைக்குள்ளே இடம்பெறுவதற்கான வழிகள் முன்னெடுத்து செல்லப்படும்.விசாரணையின் போது எந்தவொரு சர்வதேச வழக்கறிஞர்களையும் நீதிமன்ற வாதங்களுக்கு இலங்கை அனுமதிக்காது.

மதத்தலைவர்கள், இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருடன் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே ஐக்கிய நாடுகளின் பரிந்துரைப்படியான நீதிமன்றத்தை அமைக்கப்படும்.சர்வதேசத்தை வெல்லவேண்டிய சவால் தம்முன் இருக்கும் போதே தான் பொறுப்பிற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆச்சரியம் அடங்குவதற்குள் அந்தர் பல்டியை அடித்துள்ள சிறீசேனாவின் செயல்,ஈழ தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

Comments
Loading...