Designed by Iniyas LTD
இலங்கை வருகிறது இந்திய உயர்மட்ட குழு!
இலங்கையுடனான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பரஸ்பர புரிந்துணர்வு கலந்துரையாடல் ஒன்றுக்காக இந்திய உயர் மட்ட நிபுணர்கள் குழு அடுத்த வாரத்தில் இலங்கை வருகின்றது. இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணி உத்தேச கூட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து இன்று நாடாளுமன்றத்தில் ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளன.இலங்கை மற்றும் இந்திய கூட்டு ஆணைக்குழுவின் ஊடாக கலந்துரையாடப்பட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஜுன் மாத்தில் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவான முன்னோடி திட்ட வரைபுகள் குறித்து தற்போது பகுப்பாய்வு செய்யப்படுகின்ற நிலையில் மேலதிக கருத்தாடலுக்காகவே இந்திய உயர் மட்ட நிபுணர் குழு அடுத்த வாரத்தில் இலங்கை வருகின்றது.
தொடர்புடைய பதிவு
இதன்போது இலங்கை வர்த்தக சங்கத்தினர் மற்றும் இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் அமைப்புகள் உள்ளிட்டவர்களின் பங்குப்பற்றலுடன் விசேட செயலமர்வு ஒன்றில் இந்திய உயர் மட்ட நிபுணர்கள் குழு கலந்துக் கொள்ளவுள்ளதுடன், பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்ப கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கேள்விகளுக்கும் இந்திய நிபுணர் குழு பதிலளிக்க உள்ளது.
பொருளாதார மற்றும் தொழில்நுட்பத்தை மையப்படுத்திய இலங்கை-இந்திய கூட்டு ஒப்பந்தத்தின் முன்னோடியான ஆவணங்களில் இரு நாட்டு அரசுகளும் ஜுன் மாதத்தில் கைச்சாத்திட உள்ளன. இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் குறித்த இலங்கை – இந்திய ஒப்பந்தம் தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது தமது ஆட்சேபனையை தெரிவிக்க உள்ளதுடன் நாடளாவிய ரீதியில் மக்களை தெளிவுப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.