தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் : ஐநா அதிகாரிகள்

warஇலங்கை இறுதிப்போரின்போது பாதுகாப்பு வளையத்தில் பதுங்கியிருந்த அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டது உண்மைதான் என அப்போது அங்கு பணியில் இருந்து ஐநா அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் இறுதிப்போரின்போது தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நோ ஃபைர் ஜோன் என்ற பெயரில் ஆவணப்பட இயக்குனர் கலம் மெக்ரே “இலங்கை – நீதியைத் தேடி” என்ற பெயரில் மற்றுமொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 இதில் போர் இறுதிக்காலங்களில் பணியாற்றிய ஐநா அதிகாரிகளின் பேட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதில் , பேட்டி அளித்துள்ள பெஞ்சமின் டிக்ஸ் என்ற ஐநா அதிகாரி, அந்த அப்பாவி தமிழ் மக்கள் எந்த ஐநா அமைப்பை நம்பியிருந்தார்களோ அந்த அமைப்பே ஐநா அதிகாரிகளை வெளியேறச்சொன்னது என்று ஐநா அமைப்பின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அடுத்ததாக பேட்டியளித்துள்ள கார்டன் வைஸ் என்ற ஐநா முன்னாள் செய்தித்தொடர்பாளர், இறுதிப்போரின்போது சாட்சியங்களே இல்லாமல் தமிழ்மக்களைக் கொன்று குவிப்பதே இலங்கை அரசின் திட்டமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆவணப்படத்தில் இறுதிப்போரின்போது எத்தனை ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது எவருக்குமே தெரியாது என்று கூறியுள்ள கலம் மெக்ரே, சமீபத்திய தகவலின்படி குறைந்தது 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

 பிடிபட்டவர்களைக் கொன்று அவர்களது உடல்களை எரித்துவிட்டதால் சரியான எண்ணிக்கை தெரியாமல் இலங்கை ராணுவம் பார்த்துக்கொண்டுள்ளது என்றும் ஆவணப்படம் தெரிவிக்கிறது.

பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டது, இசைப்பிரியா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்டது, தமிழர்களைக் கைகளைக் கட்டி வைத்துவிட்டு இலங்கை ராணுவ வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு குருவிகளைச் சுடுவது போல சுட்டு ரசிப்பது போன்றவை ஆவணப்படத்தில் பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழகர்களுக்கு நீதியை அளிக்க முடியும் என்றும் ஆவணப்படம் வலியுறுத்துகிறது.

Comments
Loading...