தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

இலங்கையின் இரத்தினப்புரி மாவட்டம் கஹவத்த நகரில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்துகான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது திங்களன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கபே அமைப்பு தெரிவித்துள்ளது.nocredit

திங்களன்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். ஜீப்களில் வந்த சிலர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர் மூன்று எதிர்க் கட்சி ஆதரவாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் கஹவத்த நகரில் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த கீர்த்தி தென்னகோன், அருகில் அமைக்கப் பட்டிருந்த ஆளும் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகமொன்றை தாக்கி தீக்கிரையாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக அயகம , கம்போல, ககிராவ, கலேவெல, வெல்லம்பிட்டி, கொலன்னாவ ஆகிய பகுதிகளில் இருந்தும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

திருகோணமலையிலும் தாக்குதல்

இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த இலங்கை காவல்துறையின் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன, திருகோணமலைப் பகுதியில் பிரதித் தேர்தல் அதிகாரியொருவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திருகோணமலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் டிஜிட்டல் விளம்பரப் பலகையொன்று தொடர்பாக ஆராய்வதற்கு சென்ற தேர்தல் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அஜித் ரோகன, இந்த தாக்குதல் தொடர்பாக, காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Comments
Loading...