Designed by Iniyas LTD
கடமையை செய்யாத 13 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்…
மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பொலிஸாருக்கு நேற்று முன் தினம் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
உரிய முறையில் கடமையை செய்ய வில்லை என்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் அடைக்கல மோட்டை பகுதியில் உள்ள புலவுக்காணியில் அனுமதி இன்றி சட்ட விரோதமான முறையில் ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் வாய்க்காலுக்கு பொறுப்பான பொறியியல் உதவியாளர் ஒருவரும், விவசாய அமைப்பின் தலைவரும் நிலமையை நேரில் பார்வையிடுவதற்காக அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது சட்ட விரோதமாக அரசாங்கத்தின் புலவுக் காணியில் உழுதுகொண்டிருந்த விவசாயியை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
குறித்த புகைப்படங்களை அழிக்குமாறு விவசாயி தெரிவித்ததோடு, அங்கு சென்ற இருவரையும் தாக்கியநிலையில், காயமுற்றவர்கள் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டுக்கரை குள திட்ட முகாமைத்துவக் குழு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை சந்தித்து குறித்த பிரச்சினை தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
அதோடு தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த புதன் கிழமை இரவு மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 13 பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்ய முயன்றுள்ளனர்.
இதன் போது பொலிஸார் மீது அவர்கள் தாக்குதல்களை மோற்கொண்ட நிலையில் பொலிஸார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, கைத்துப்பாக்கி ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாகவே குறித்த 13 பொலிஸாருக்கும் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.