Designed by Iniyas LTD
கர்நாடகத்துக்கு பேருந்து சேவை 2-வது நாளாக நிறுத்தம் : தஞ்சையில் கர்நாடக அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல்
தஞ்சையில் கர்நாடக அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 2-வது நாளாக கர்நாடகத்துக்கு தமிழக அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
காவிரி பிரச்சினை
தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் கர்நாடக அரசு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. பெங்களூருவில் இருந்து கர்நாடக அரசு பஸ் தினமும் காலை 6 மணிக்கு தஞ்சை புதிய பஸ்நிலையத்துக்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் இரவில் பெங்களூரு புறப்பட்டு செல்லும். மேலவஸ்தா சாவடியில் உள்ள ஒரு கோவில் அருகே பகலில் அந்த பஸ் நிறுத்தப்பட்டு இருக்கும்.
கல்வீசி தாக்குதல்
அதன்படி நேற்று காலை பெங்களூருவில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு கர்நாடக அரசு பஸ் வந்து பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர் பஸ்சை டிரைவர் ராஜ்நாயக், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையம் அருகே நிறுத்துவதற்காக கொண்டு சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடியில் கல்லை வைத்து சுற்றி பஸ்மீது வீசியது தெரியவந்தது. இதையடுத்து பஸ் பாதுகாப்பாக தஞ்சை கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஸ்கள் நிறுத்தம்
ஈரோடு, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் நிறுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் தமிழக லாரிகளும் நிறுத்தப்பட்டன. கார், வேன் போன்ற வாகனங்கள் மட்டும் கர்நாடக மாநிலத்துக்கு சென்று வந்தன.
ஆனால் கர்நாடக அரசு பஸ்கள் வழக்கம்போல் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றன. இதனால் அந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு-கர்நாடக எல்லையான தாளவாடி அருகே உள்ள சோதனை சாவடியில் இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஓசூர் வரை சென்றன
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து நேற்று 2-வது நாளாக கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக அரசு பஸ்கள் தமிழக எல்லையான பாலாறு சோதனைச் சாவடியுடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் வேன், டெம்போ, மினிலாரிகளில் ஏறிச் சென்றனர்.
வேலூரில் இருந்து பெங்களூரு, கோலார் மற்றும் மங்களூரு போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன.
பயணிகள் பரிதவிப்பு
சென்னை, மதுரை, திருச்சி, நாகர்கோவில், நெல்லை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் 100-க்கும் மேற்பட்ட அதிவிரைவு பஸ்கள், ஓசூர் பஸ் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று பெங்களூரு செல்ல வெளியூர்களிலிருந்து வந்த ஏராளமான பயணிகளும், ஓசூரிலிருந்து பெங்களூரு பகுதிக்கு வேலைக்கு செல்பவர்களும், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாததால் கடும் அவதியடைந்தனர். ஆனாலும் நேற்று வழக்கம்போல் கர்நாடக அரசு பஸ்கள் ஓசூர்-பெங்களூரு இடையே இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பயணிகள் பரிதவித்தனர்.