Designed by Iniyas LTD
குருந்தூர் மலைக்கு பிக்குகள் செல்ல முடியாது – நீதிமன்றம் உத்தரவு..
முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது பிரதேச இளைஞர்களால் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதுடன் முறுகல் நிலை ஒன்றும் தோன்றியிருந்தது.
அப்போது ஒட்டுசுட்டான் பொலீசார் அதில் தலையிட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறிதத சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை தாக்கதல் செய்திருந்தனர்.
குறித்த விசாரணை கடந்த 06 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ., 13. ஆம் திகதிவரை குறித்த மலைக்கு எவரும் செல்ல கூடாதென தற்காலிக தடை உத்தரவினை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இன்னிலையில் இன்று குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த கிராமத்தின் சார்பாக மக்களும், விகாரை அமைக்கவந்த பௌத்த துறவிகள் தரப்பினரும் , ஒட்டுசுட்டான் பொலீசாரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கினை விசாரித்த கௌரவ நீதவான் குறித்த மலைப்பிரதேசத்தில் தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை என்றும்,
குறித்த பிரதேசத்தில் புதிதான கட்டுமானம் மற்றும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளகூடாது. என்றும்,
தொல்பொருள் ஆய்வு என்றபோர்வையில் புதிதாக எந்தவொரு மதத்தினையும் சேர்ந்த ஆலயங்கள் அமைப்பதும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும்,
அவ்வாறு நிர்மாணிப்பதாக இருந்தால் பொலீசில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றின் அனுமதியுடன் மேற்கொள்ளமுடியும் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை குருந்தூர் மலையில் தொல்பொருள் அகழ்வு ஆராச்சிகள் மேற்கொள்ளவேண்டுமாக இருந்தால் யாழ்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் பங்குபற்றலுடன் மூத்த வரலாற்று ஆய்வாளர்களினதும் பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம்வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே அகழ்வு ஆராச்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு அவ்வாறு செய்யப்படாதுவிடத்து இனமுரண்பாடுகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து மன்றுக்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது
மேலும் குறித்த பிரதேசத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்களான பௌத்த துறவிகள் செல்லமுடியாது என்றும் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

