தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோடைமழை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது

சென்னையில் கடந்த ஒருமாத காலத்துக்கும் மேலாக அணல்பறந்த தேர்தல் பிரசாரத்தையும், வாட்டி, வதைத்த வெயிலையும் மறக்கும் வகையில் இன்று அதிகாலையில் இருந்து பெய்துவரும் கோடைமழை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.  சென்னை நகரம் முழுவதும் கடந்த ஒருமாத காலத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த அரசியல் கட்சி தலைவர்களின் அணல்பறந்த தேர்தல் பிரசாரமும், வாக்குப்பதிவும் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.rains

மேலும், வாட்டி, வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க கோடைவாசஸ்தலங்களை நோக்கிச் செல்ல வசதிபடைத்த பலர் திட்டமிட்டு வருகின்றனர்.  இவர்களுக்கும், கோடைவாசஸ்தலங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவே இயலாத, வசதிகுறைந்த ஏழை, எளிய மக்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்று முன்தினம் பின்னிரவில் இருந்து சென்னை நகரின் பல பகுதிகளில் மிதமான கோடைமழை பெய்து வருகிறது.   நேற்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியில் தொடங்கி இன்று அதிகாலை 6 மணிவரை சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தின் தகவல் அடிப்படையில் 43.9 மில்லிமீட்டர் மழையும், மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தின் தகவல் அடிப்படையில் 64 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

இவ்வகையில், மெதுவாக பெய்தாலும் ஒருமாத மழை நீரின் அளவை சென்னை ஒரேநாளில் பெற்றுள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு சமாளிக்கப்படும் என தெரிகிறது.   குறிப்பாக, இன்று அதிகாலையில் இருந்து விட்டு,விட்டு பெய்துவரும் தூறல்மழையானது, மக்களின் அன்றாட பணிகளுக்கு குந்தகமோ, இடையூறோ விளைவிக்காமல் இருப்பதால் மக்கள் உடலும், மனமும் குளிர்ந்த நிலையில் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகின்றனர்.  தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் இதேநிலை நீடிப்பதாக தெரியவந்துள்ளது.

Comments
Loading...