Designed by Iniyas LTD
சூரிய சக்தி மின்சாரத்தை கொள்முதல் செய்வது தொடர்பாக புதிய உத்தரவு
சூரிய சக்தி மின்சாரத்தை கொள்முதல் செய்வது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துத்துள்ளது. இந்த உத்தரவினால் மின்சார வாரியத்திற்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று ஒழுங்குமுறை வாரியத்தின் உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் முதல் நடப்பாண்டு செப்டம்பர் வரையிலான காலத்தில் சூரிய சக்தி மின்சாரத்தை, யூனிட் ஒன்றுக்கு 7 ரூபாய் ஒரு காசுக்கு வாங்கிக்கொள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதற்கான கால நிர்ணயம் முடிவடையும் முன்னரே, இந்த மின்சார கொள்முதலை அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
தனியார் மின்சார உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள அடிப்படை நியாங்களைக் கணக்கிட்டே இந்த விலை நிர்ணயம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
அக்சய குமார் தலைமையில் உறுப்பினர் ராஜகோபல் இடம்பெற்றுள்ள குழு இம்முடிவை அறிவித்துள்ளது. ஆனால், இக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொரு உறுப்பினர் நாகல்சாமி, சூரிய சக்தி மின்சாரத்தை 7 ரூபாய் ஒரு காசுக்கு வாங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சூரிய சக்தி மின்சாரத்தின் விலை யூனிட்டிற்கு 5 ரூபாய் 87 காசுகளாக குறைந்துள்ள நிலையில், பழைய விலை நீட்டிப்பு விதிகளுக்கு எதிரானது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விதி மாற்றத்திற்குப் பிறகு 25 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்றும், இதனால் மின்வாரியத்திற்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.
5 ஆயிரத்து 366 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை வழங்க முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டியுள்ள நாகல்சாமி, குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கினால் கூட 10 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சூரிய சக்தி மின்சாரத்திற்கான மூல செலவு பெருமளவு குறைந்துள்ளது என மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், யாரை திருப்திப்படுத்த இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என நாகல்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
உற்பத்தியாளர்களின் கோரிக்கை ஏற்கனவே மறுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பழைய விலையை நிர்ணயிப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் நாகல்சாமி கூறியயுள்ளார்.