தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யத்தேவையில்லை – தனஞ்ஜெயா

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தேவையில்லை என்று கர்நாடக அரசை, அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவுத் தலைவர் தனஞ்ஜெயா கேட்டுக் கொண்டிருக்கிறார்.thananshaya

இதுதொடர்பாக அவர் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சுப்பிரமணியன் சுவாமி தான் தாக்கல் செய்தார் என்றும், முதலில் தமிழக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியே கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டதாக கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் செயல்பாடு நிர்வாக ரீதியிலானது மட்டுமேயன்றி, நீதித்துறை சார்ந்தது அல்ல என்றும் தனஞ்ஜெயா தெரிவித்திருக்கிறார். இந்த வழக்குத் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம், அல்லது உயர்நீதிமன்ற விசாரணையிலோ, அல்லது வாதங்களிலோ, ஒரு தரப்பாக கர்நாடக அரசு செயல்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும், இந்த வழக்கு தமிழகத்திலிருந்து மாற்றப்பட்டபோது, உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கு விசாரணை கர்நாடகாவில் நடைபெறுவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்ததையும், அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது, நல்லதொரு அணுகுமுறையாக இருக்காது என்றும், கர்நாடக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தனஞ்ஜெயா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Comments
Loading...