Designed by Iniyas LTD
ஜெயாவை அம்மா என்று அழைப்பது இழுக்கு! திருவடிகுடில் சாமியார்
ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பது மிகப்பெரிய இழுக்கு என திருவடிகுடில் சாமியார் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாயன்மார்கள் பலரும் அறிந்துள்ள பெண்ணடியார்கள் மூவரில் அம்மையார் என்று அழைத்து போற்றப்படுபவர் காரைக்கால் அம்மையார்தான்.
இவரது பக்தியின் மேன்மையால் சிவபெருமானே இவரை அம்மா என்று அழைத்தார். தகுதியுடையவர்களைதான் அம்மா என்று அழைக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆனால், தமிழகத்தில் என்ன நடக்கிறது? ஊழல் செய்து பெருமளவில் சொத்து சேர்த்த பொது வாழ்வில் அழுக்குடைய ஜெயலலிதாவை அம்மா என்று ஏராளமானவர்கள் அழைத்து வருகிறார்கள்.
எங்கள் அம்மா மீது ஊழல் வழக்கு நடக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்குத்தான் நடக்கிறது என்று அவர் கட்சியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி கூறுகிறார்.
ஊழல் செய்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருவரை, பொது வாழ்வில் தூய்மை இல்லாத ஒருவரை அம்மா என்று அழைப்பதுடன் எங்கு பார்த்தாலும் அம்மா புராணம் பாடுவதால் அந்த சொல்லுக்கே மதிப்பில்லாமல் போய்விடுகிறது.
இதன் மூலம் காரைக்கால் அம்மையார் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துகிறார்கள். தன் அழகைத் துறந்து எலும்புடம்பாகிய பேய் உருவம் கேட்டுப் பெற்றதுடன், எளிமையை கடைபிடித்தவர் காரைக்கால் அம்மையார். அதனால்தான் அவரை அம்மா என்று இன்றும் அழைக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதாவோ ஆடம்பரத்தின் உச்சம். எளிமை என்றால் அவருக்கு என்னவென்றே தெரியாது. அவரைப் போய் அம்மா என்று அழைப்பது வேதனையின் உச்சம் என தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.