Designed by Iniyas LTD
தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது – ஸ்டாலின் கேள்வி
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவேற்றியுள்ளார்.
அவரது பதிவில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறைவுரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு பெறும் வகையில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றவர், முதலீடு மூலம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேருக்கு வேலை கொடுக்கப் போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில்தான் தேர்தல் நாடகத்தின் ஒரு பகுதியாக, அனைத்து பத்திரிகைகளிலும் இன்று ஒரு விளம்பர யுத்தத்தை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
உலக முதலீட்டாளர்கள் சந்திப்பின் தொடர்ச்சியாக காணொலிக் காட்சியில் 7 திட்டங்களை தொடங்கி வைக்கப்போவதாகவும், 7 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த 14 கம்பெனிகளும் செய்யப் போவதாக சொல்லும் முதலீடு வெறும் ரூ.13,690 கோடி. அதே போல் இந்தக் கம்பெனிகள் 34,428 பேருக்கு வேலை கொடுக்கப் போவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அரசு விளம்பரத்திற்கும், ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் பல முரண்பாடுகள் இருக்கின்றன.
சன் எடிசன் சோலார் பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும், 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், இப்போது அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் அந்தக் கம்பெனி ரூ.300 கோடி முதலீடு செய்வதாகவும், 2000 பேருக்கு வேலை கொடுக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், வெல்ஸ்பன் ரினீவபல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் கம்பெனி ரூ.6,500 கோடி முதலீடு செய்யப் போவதாகவும், 1000 பேருக்கு வேலை கொடுக்கப் போவதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இப்போது அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் அந்தக் கம்பெனி ரூ.975 கோடி முதலீட்டிலேயே 1000 பேருக்கு வேலை கொடுக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. சாம்சங் இந்தியா லிமிடெட் (விரிவாக்கம்) கம்பெனி சார்பில் ரூ.800 கோடி முதலீடும், 2500 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப் போவதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் இப்போது அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் ரூ.450 கோடி மட்டுமே முதலீடு செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்து ஏறக்குறைய 140 நாட்கள் ஆகப் போகிறது. ஆனால், ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு வரும் என்று தடபுடலாக அறிவித்து விட்டு இப்போது வெறும் ரூ.13,690 கோடி முதலீடு கொண்டு வர தடுமாறுவதை என்னவென்று சொல்வது? அது மட்டுமல்ல, 4.70 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு இப்போது வெறும் 34,428 பேருக்கு வேலை கொடுக்கப் போவதாக இந்த விளம்பரங்களின் மூலம் அறிவித்துள்ளது ஏன்? ரூ.200 கோடிக்கு மேல் அரசு பணத்தை செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் அதிமுக மாநாடு போலவே நடத்தி, அதிமுகவிற்கு விளம்பரம் தேடிக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.