Designed by Iniyas LTD
தமிழகத்தில் கடும் வறட்சியால் அரிசி விலை அதிகரிப்பு!
மே மாதம் வரை விலை குறைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
நெல் – அரிசி விலை உயர்வு
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தால் கடும் வறட்சி நிலவிவருகிறது. நெல் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால், நெல் விலை உயர்ந்து வருகிறது. 76 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூபாளி பொன்னி நெல் கடந்த மாதம் ரூ.1,400–க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.200 விலை உயர்ந்து, ரூ.1,600–க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், டீலக்ஸ் பொன்னி நெல் மூட்டை ரூ.1,600–ல் இருந்து ரூ.1,800 ஆகவும், பாபட்லா பொன்னி நெல் மூட்டை ரூ.1,800–ல் இருந்து 2 ஆயிரம் ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது. நெல் விலை உயர்வால் அரிசி விலையும் கூடியுள்ளது. 75 கிலோ எடை கொண்ட பாபட்லா பொன்னி அரிசி மூட்டை ரூ.3,500–ல் இருந்து ரூ.3,700 ஆகவும், பாபட்லா பொன்னி முதல் ரகம் ரூ.3,700–ல் இருந்து ரூ.3,900 ஆகவும், ரூபாளி பொன்னி ரூ.2,200–ல் இருந்து ரூ.2,400 ஆகவும், டீலக்ஸ் பொன்னி ரூ.2,800–ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும் விலை அதிகரித்துள்ளது.
காரணம் என்ன?
தமிழகத்தில் தற்போது நெல் விளைச்சல் இல்லாத நிலையில், மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய வட மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு நெல் வரத்து இருக்கிறது. நீண்ட தூரம் லாரிகளில் கொண்டுவர வேண்டியிருப்பதால், அதற்கான வாடகையும் நெல் விலையுடன் தான் சேர்க்கப்படுகிறது. இது தான் நெல் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் ஸ்டீம் அரிசி வரத்தும் குறைந்துள்ளது. இதனால், அதன் விலையும் அதிகரித்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட கர்நாடகா ஸ்டீம் அரிசி மூட்டை ரூ.1,150–ல் இருந்து 1,250 ஆகவும், ஆந்திரா ஸ்டீம் அரிசி மூட்டை ரூ.1,000–ல் இருந்து ரூ.1,100 ஆகவும் விலை கூடியுள்ளது.
மே மாதம் வரை நீடிக்கும்
இதேபோல், தமிழகத்தில் விளையும் ரூபாளி பொன்னி அரிசி 25 கிலோ மூட்டை ரூ.800–ல் இருந்து ரூ.900 ஆகவும், டீலக்ஸ் பொன்னி அரிசி ரூ.900–ல் இருந்து ரூ.1,000 ஆகவும், அதிசய பொன்னி அரிசி ரூ.1,000–ல் இருந்து ரூ.1,100 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. மேலும், பாபட்லா பொன்னி மூட்டை முதல் ரகம் ரூ.1,200–ல் இருந்து ரூ.1,300 ஆகவும், 2–வது ரகம் ரூ.1,100–ல் இருந்து ரூ.1,200 ஆகவும், வெள்ளை பொன்னி மூட்டை ரூ.1,400–ல் இருந்து ரூ.1,500 ஆகவும், இட்லி அரிசி மூட்டை முதல் ரகம் ரூ.900–ல் இருந்து ரூ.1,000 ஆகவும், 2–வது ரகம் ரூ.800–ல் இருந்து ரூ.900 ஆகவும் விலை கூடியுள்ளது.
பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பாஸ்மதி அரிசி முதல் ரகம் ஒரு கிலோ ரூ.90–ல் இருந்து ரூ.110 ஆகவும், 2–வது ரகம் ரூ.70–ல் இருந்து ரூ.90 ஆகவும், 3–வது ரகம் ரூ.50–ல் இருந்து ரூ.70 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. வரும் மே மாதம் வரை இந்த அரிசி விலை உயர்வு நீடிக்கும் என்றும், அதன் பிறகே குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.