Designed by Iniyas LTD
தமிழ்மக்களுக்கான நியாயத்திற்காக ஜெனிவாவுக்கு செல்வதில் என்ன தவறு?

வடக்கில் இன்று பாரிய படை சுற்றிவளைப்புக்களாலும். குடும்பம் குடும்பமாக தமிழ் மக்கள் கைது செய்யப்படுவதாலும் அங்கு மக்கள் பெரும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில் ஜெனிவாவுக்கு செல்வதில் என்ன தவறு? இதற்கு வழிகாட்டியவர்கள் மகிந்தவும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருமே. என சபையில் சுட்டிக் காட்டியள்ளார் சுரேஷ் பிரேமச்சந்திரன் .
பாராளுமன்றத்தில் நேற்று முன்னாள் இடம்பெற்ற மனித உரிமை ஆணையாளருக்கான எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கில் இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பிரதேசங்களில் சிங்களப்படை பாரிய சுற்றிவளைப்புக்களை நடத்தி மக்களை கைது செய்கின்றது. இதில் என்ன விசேடமென்றால் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக கைது செய்யப்படுகின்றனர்.
அண்மையில் மூங்கிலாறு உடையார் கட்டு பிரதேசத்தில் இரண்டு ஆண்களும் அகஸ்டியன் மற்றும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று விசுவமடுவில் கலாகரன், சுதாகரன் என்ற இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் வைத்து பாலகுமாரன் தர்மிளா என்ற பெண்ணும், அவரது கணவரான பால குமாரன் யாழ்ப்பாணத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் ஜெயகுமாரி என்ற தாயும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே தமது மகன்மார் இருவருக்கு அதே போன்று தனது சகோதரர்களுக்கு என்ன நடந்தது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வடக்கில் குடும்பம் குடும்பமாக தமிழ் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். மன்னார் திருக்கேதீஸ்வரர் பிரதேசத்தில் 83 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பில் விசாரணைகளை நடத்தாது இப்பிரதேசத்தில் பழைமையான மயானமொன்றிருந்தது என காவல்துறை மற்றும் படை பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
திருக்கேதீஸ்வர பிரதேசம் என்பது இந்துக்கள் வாழும் பிரதேசமாகும். இங்கு கத்தோலிக்கர்கள் வாழவில்லை. இந்துக்கள் இறந்தால் சடலம் புதைக்கப்படாது. அது எரிக்கப்படும். இது தெரியாது முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
இதேபோன்று முல்லைத்தீவில் 9 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டதாக இல்லை. உடனே அது புலி சுட்டது என ஒரே வரியில் பதிலை தெரிவித்தனர்.
மனித உரிமை ஆணைக் குழுவினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக எந்தவொரு காவல்நிலையத்திற்கும் படை முகாமுக்கும் செல்ல முடியதாமென அரசு கூறுகிறது.
ஆனால் மனித உரிமை ஆணைக்குழுவினருக்கு அவ்வாறு செல்ல முடியாது. படை முகாம்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மற்றும் தடுப்பு முகாம்கள் எங்குள்ளது என இவர்களுக்கு தெரியாது.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பாக தகவல்களை பெற முடியாது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்படும் தமிழ் மக்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது எவருக்கும் தெரியாது. உறவினர்களுக்கும் தெரியாது. மனித உரிமை திணைக்கள குழுவினருக்கும் தெரியாது.
வடமாகாண அரச அதிபர் உட்பட அதிகாரிகளை அழைத்து யாழ்.கட்டளைத் தளபதி உதய பெரேரா, காணிகள் தொடர்பாக உத்திரவுகளை பிறப்பிக்கின்றார். அது மட்டுமல்லாது கிராமிய விழிப்புக் குழுக்களில் கட்டாயமாக படையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே படை முகாம்களில் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் இன்று வடக்கில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகின்றது. ஆனால் தென்பகுதியில் எங்காவது உயர்தர மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படுகின்றா?
வட மாகாணத்தின் பிரதி காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை ஜனாதிபதியே நியமித்தார்.
அவர் தன்னிச்சையாக ஆளுநரோடு கலந்தாலோசித்து உத்தரவுகளை பிறப்பிக்கின்றார். ஆனால் நீங்கள் கொண்டுவந்த, நீங்கள் ஏற்றுக்கொண்ட 13ஆவது திருத்தத்தில் இவ்வாறான பதவிக்கு நியமிக்கப்படுபவர் தொடர்பாக முதலமைச்சரோடு கலந்தாலோசிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பிரதாயம் வடமாகாணசபை தொடர்பில் சிங்கள அரசு கடைப்பிடிப்பதில்லை. வடமாகாணசபைக்கு அதிகாரங்களும் வழங்குவதில்லை. உள்ள அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றன. சுயாதீனமாக மாகாணசபைக்கு இயங்க இடமில்லை. 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது எதற்காக கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வடமாகாணசபை தேர்தலை நடத்தினீர். இதனால் எந்த மன்னாங்கட்டியும் கிடைக்கவில்லை.
ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பு சிறீலங்காஅரச குழுவொன்று தென்னாபிரிக்கா சென்றது. அங்கு யுத்தத்திற்கு பின்னர் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அந்நாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. ஆனால் இங்கு யுத்தம் முடிந்துவிட்டது இதுவரையில் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கவில்லை.
அமைச்சர் பீரிஸ் ஜெனிவாவில் வடக்கில் சிவில் நிர்வாகம், அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். ஆனால் இங்கு அந்த விதமான சிவில் நிர்வாகம் கிடையாது. அனைத்தும் படை மயமாகவே உள்ளது.
தென்னாபிரிக்கா அல்ல ஐரோப்பாவிற்கு போனாலும் சிறீலங்காஅரசாங்கம் இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்கப்போவதில்லை என்பதுதான் உண்மை. அன்று சிறீலங்காவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. சென்று முறையிட்டவர் மகிந்தவும், அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் ஆவார்கள். சிங்கள மக்கள் பாதிக்கப் படும்போது ஜெனிவா சென்று முறையிட்டனர். அதற்கு இவர்களே வழிகாட்டியவர்கள் ஆவார்கள்.
இன்று தேசிய இனமான தமிழ் மக்கள் தொடர்ந்து அழித்தொழிக்கப்படுகின்றனர். எனவேதான் ஜெனிவா செல்கின்றோம். அப்படிச் செல்லும்போது அதற்கு தேசத் துரோகி என்ற முத்திரை குத்தி இவ்வாறு ஜெனிவா செல்வோர் கைது செய்யப்பட வேண்டுமென சிங்களஅரசாங்கம் ஊடகங்கள் மூலம் கருத்துக்களை வெளியிடுகின்றது.
அப்படியானால் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டபோது, ஜெனிவா சென்றதை என்னவென்று கூறுவது. யுத்தம் முடிந்த பின்னர் மனித உரிமைகளை பாதுகாத்து மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கியிருந்தால் ஜெனிவா பிரச்சினை வந்திருக்காது என்றார்.