Designed by Iniyas LTD
திருச்சி சிறப்பு முகாமில் ஈழ நேரு உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்
இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரத்தால் 2 ஈழ அகதிகளை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு அகதிகள் முகாமில் 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழர்களில் 23 பேர் நேற்று மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையை இலங்கை தமிழர்கள் 31 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 26 பேர் தங்கள் மீதான குற்ற வழக்குளை விரைந்து விசாரித்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 15 ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
4வது நாளாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவர்களில் 23 பேர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தனர். உடனே அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், 5வது நாளான நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த ஈழ நேரு, ஞானஉதயன், சந்திரகுமார், ஸ்ரீஜெகன், மகேஷ்வரன், சிவனேஷ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மருத்துவக் குழுவினர், அவர்களது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி திருச்சி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்தவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த 7 பேரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருப்பதை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.
இவர்கள் தவிர மற்ற 19 பேர் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்ததை தொடர்ந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களை பார்க்க வந்த நாம் தமிழர் கட்சியினருக்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் சிறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்சி கே.கே.நகர் போலீஸார் 11 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் பெரிதாவதாக உணர்ந்த போலீஸார், ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு, கருணைராஜா உள்ளிட்ட இருவரை நேற்று மாலை கைது செய்தது, சிறப்பு முகாமில் உள்ள அகதிகளை போராட தூண்டியது, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருச்சி நீதித்துறை இரண்டு எண் நீதிமன்ற நீதிபதி ராஜாராம், நேற்று மருத்துவமனையில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து ஈழ நேரு உள்ளிட்ட இருவரையும் டிசம்பர் 3ந்தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.