Designed by Iniyas LTD
தேர்தல் “ராப்” பாடல் இறுவெட்டு வெளியீடு
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டவேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுபற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக பொது இடங்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் ஏராளமான விழிப்புணர்வு படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பிரபல நடிகர்களை கொண்ட குறும்படங்களும் தயாரிக்கப்பட்டு உள்ளூர் சேனல்கள் மற்றும் சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ‘ராப்’ பாடல் புகழ் பிளாசே மற்றும் பால் ஜேக்கப் ஆகியோர் தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தும் ‘ஓட்டுப்போடு’ என்ற ‘ராப்’ விழிப்புணர்வு பாடலை தயாரித்துள்ளனர்.
இதற்கான சி.டி. வெளியிடும் நிகழ்ச்சி தலைமை தேர்தல் அலுவலகத்தில் நடந்தது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கலந்து கொண்டு சி.டி.யை வெளியிட்டார். இதுகுறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:- ‘ராப்’ பாடலை இளைய சமுதாயத்தினர் விரும்பி கேட்பார்கள். எனவே வாக்குப்பதிவை வலியுறுத்தி இளையசமுதாயத்தினரை குறி வைத்து இந்த ‘ராப்’ பாடலை பிளாசே மற்றும் பால் ஜேக்கப்ஆகியோர் தயாரித்துள்ளனர். சுதந்திர தாகம், வாக்களிக்கும் நேரம் இது, ஓட்டுப்போடு ஓட்டுப்போடு 100 சதவீதம் ஓட்டுப்போடு என்ற வரிகளுடன் பாடல் தொடங்குகிறது.
இந்த சி.டி. 2½ நிமிடங்கள் ஓடக்கூடியது. குடிசைப்பகுதிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி என எல்லா இடங்களுக்கும் சென்று இந்த பாடலை அவர்கள் எடுத்துள்ளனர். இந்த பாடல்கள் தேர்தல் கமிஷன் இணையதளம், உள்ளூர் சேனல்கள், சினிமா தியேட்டர்கள், சமூக வலைதளங்கள் மூலம் விரைவில் ஒளிபரப்பப்படும். பிளாசே மற்றும் பால் ஜேக்கப் ஆகியோர் ஒரு நிமிடம் ஓடக்கூடிய பாடல்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.கிர்லோஷ்குமார், பிளாசே மற்றும் பால்ஜேக்கப் ஆகியோர் உடன் இருந்தனர்.