Designed by Iniyas LTD
தொடர்ந்தும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்படும் அனந்தி சசிதரன்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்ட போதும் நிம்மதியான வாழ்வு கிடைக்கவில்லையென கவலை வெளியிட்டுள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன். தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அனந்தி மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும், பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களுடன் காணாமல்போனோரின் உறவினர் என்ற வகையில் நானும் எனது இரு குழந்தைகளும் மடு திருத்தலத்திற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சென்றிருந்தோம்.
அன்றைய தினம் தட்சணா மருதமடுவில் தங்கியிருந்து மறுநாளான புதன்கிழமை காணாமல் போனோரின் உறவினர்களின் குழுவுடன் இணைந்து பாப்பரசரை சந்திப்பதற்கு எண்ணியிருந்தேன். எனினும் நான் இல்லாத சந்தர்ப்பத்தில் எனது வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் வாகனம் பற்றி விசாரணை செய்துள்ளனர்.
புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை புகைப்படம் எடுத்ததுடன் சாரதியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். புதிய ஆட்சி என சொல்லிக் கொள்பவர்கள் தொடரும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.