தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பல தசாப்பதாகலமாக அலரி மாளிகைக்குச் சென்று தீர்வைப் பெறமுடியாத காரணத்தினாலேயே தமிழ் மக்கள் இன்று ஜெனிவாவை நாடியுள்ளனர்

பல தசாப்தகாலமாக அலரிமாளிகைக்கு சென்று தீர்வைப் பெற முடியாத  காரணத்தினாலேயே  தமிழ்  மக்கள்  இன்று ஜெனிவாவை நாடியுள்ளனர் என்பதை ஜனாதிபதியின் மைந்தர் நாமல் ராஜபக் ஷ தெரிந்து கொள்ள வேண்டும். என்று அரியநேந்திரன் எம்.பி.தெரிவித்தார்.2

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ப.அரிய நேந்திரன் தமிழ் மக்கள் சார்பில் தீர்வைப் பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனிவாவுக்கு ஓடுவது கேவலமான செயல் எனக் கருத்துத் தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் கூற்றுக்கு பதில் கூறும் வகையிலையே அரியநேந்திரன் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் நாமல் ராஜபக்ஷ கூறிய கருத்தை நாம் உண்மையில் ஏற்றுக் கொள்கின்றோம்.

ஏனென்றால் ஜெனிவாவுக்கு தீர்வைப் பெறுவதற்கு நாம் செல்வது கேவலமான விடயம் தான். ஆனால் நாமல் ராஜபக் ஷ பிறப்பதற்கு முன்னமே தந்தை செல்வா தொடக்கம் எமது தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வைப்பெறுவதற்காக அலரி மாளிகைக்கு சென்று வந்திருக்கிறார்கள். பல ஒப்பந்தங்களை செய்திருக்கிறார்கள். சத்தியாக் கிரகங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தினார்கள்.

இந்த வரலாறுகளையும் உண்மைகளையும் நாமல் ராஜபக் ஷ தனது தாத்தாவிடம் கேட்டால் தான் தெரிந்து கொள்ள முடியும். அரசியலுக்குப் புதியவரான அவரால் இந்த சின்ன வயதில் தமிழர்கள் நடாத்திய போராட்டங்களையும் கஷ்டங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

ஜெனிவா சர்வதேசம் என்ற விடயங்கள் தெரிவதற்கு முன்னம் எமது தந்தை செல்வா தொட்டு ஏனைய தலைவர்கள் வரை உள்ள நாட்டில் பேச்சுவார்த்தைகள் மூலமும் டட்லி — செல்வா, பண்டா – செல்வா, மாவட்ட சபை, மாகாண சபை என்ற பல்வேறு ஜனநாயகப் பாதைகளினூடாக தமிழ் மக்களுக்கான தீர்வையும் சுயாட்சியையும் பெறுவதற்காக போராடி முடியாத பட்சத்திலேயே சர்வதேசத்தையும் ஜெனிவாவையும் நாட வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதை நாமல் தெரிந்து கொள்ள வேண்டும்.

போர் வெற்றியென்ற கோதாவில் தமிழ் மக்களை அடக்கி ஆழ நினைக்கும் அரசு சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக யாரிடம் செல்ல முடியு மென்பதை நாமல் ராஜபக் ஷவும் அவரின் சித்தப்பா கோத்தபாய ராஜபக்ஷவும் கூறட்டும் அங்கே செல்ல நாம் காத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Loading...