Designed by Iniyas LTD
பாக்கிஸ்தானில் பூமியதிர்வு – 3 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கே ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று மாலை 3.58 மணிக்கு சக்திவாய்ந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இந்த பூமி அதிர்ச்சி உருவானது. பூமிக்கு அடியில் 210 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. பூமி அதிர்ச்சியால் பாகிஸ்தான் நாட்டின் லாகூர், இஸ்லாமாபாத், பெஷாவர் மற்றும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்ளிட்ட பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். பாகிஸ்தானின் கைபர்-பக்துன்கவா பகுதியில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடுபாடுகளில் 3 பேர் இறந்தனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நில அதிர்வு இந்தியாவில் வடமாநிலங்களான காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. காஷ்மீரில் இன்டர்நெட், மின்சார சேவை பாதிக்கப்பட்டது.
டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் வழக்கம் போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘‘நான் டெல்லி தலைமை செயலகத்தில் 6-வது மாடியில் இருந்த போது பூமி அதிர்ச்சியின் பாதிப்பை உணர்ந்தேன். அப்போது அங்கிருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் அதிர்வடைந்ததை பார்த்தேன். இந்த அனுபவம் உண்மையிலேயே பீதியை ஏற்படுத்தியது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக குஜராத்தின் தெற்கு பகுதியில் நேற்று 3.04 மணிக்கு லேசான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. சூரத் அருகே நந்த்வி என்ற பகுதியை மையமாக கொண்டு இந்த பூமி அதிர்ச்சி உருவானது. ரிக்டர் அளவுகோலில் இது 3.4 ஆக பதிவானது. இதனால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு ஓடி வந்தனர். எனினும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.