Designed by Iniyas LTD
பிரதமர் மோடி – ரணில் டெல்லியில் சந்திப்பு
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
இந்த பயணத்தின் போது, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார். ஜெனீவாவில் இன்று தொடங்கும் ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா.வின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணமும், நரேந்திர மோடியுடனான சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய பயணத்தின் போது, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் விக்கிரமசிங்க சந்திக்கிறார்.
மோடி, சுஷ்மாவுடனான சந்திப்பின்போது, இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மாதம் இலங்கை பிரதமராக ரணில் பதவியேற்றப் பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகிறார்.
அவரது வருகையை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக அண்மையில் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.