Designed by Iniyas LTD
பிரான்ஸ் அதிபர்களை வேவு பார்த்த அமெரிக்கா : விக்கிலீக்ஸ் திடுக்கிடும் தகவல்
பிரான்ஸ் நாட்டின் அதிபர்களான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹாலண்டே ஆகியோரை அமெரிக்கா வேவு பார்த்தது என விக்கிலீக்ஸ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் உயர்மட்ட ரகசிய உளவு அறிக்கை மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள நேற்றைய அறிக்கையில், 1995 ஆம் ஆண்டு முதல் 2007 வரை சிராக் அதிபராக இருந்த காலத்திலும், 2007 முதல் 2012 வரை சர்க்கோசி அதிபராக இருந்த காலத்திலும், 2012 முதல் தற்போது வரை அதிபராக உள்ள ஹாலண்டேவையும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் கண்காணித்ததாக கூறப்பட்டுள்ளது.
இது தவிர பிரெஞ்சு அரசில் அங்கம் வகித்த பல்வேறு மந்திரிகளையும், அமெரிக்காவுக்கான பிரெஞ்சு நாட்டு தூதரையும் என்.எஸ். ஏ. கண்காணித்தாகவும் கூறியுள்ள விக்கிலீக்ஸ், இதற்கு ஆதாரமாக எலிசீ அதிபர் மாளிகையில் பணி செய்த பல்வேறு அதிகாரிகளின் செல்போன் எண்ணையும், அதிபரின் நேரடி செல்போன் எண்ணையும் வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல் நிலவியது குறித்தும், கிரேக்க நாட்டின் கடன் குறித்தும், ஹாலண்டே நிர்வாகத்துக்கும் ஜெர்மனியின் மெர்கல் அரசுக்கும் இடையே உள்ள உறவு குறித்தும், பிரெஞ்சு அதிகாரிகள் நடத்திய உரையாடல்கள் மற்றும் கடித தொடர்புகளையும் விக்கிலீக்ஸ் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இது குறித்து கருத்து தெரிவிக்க பிரெஞ்சு அரசு மறுத்துவிட்டது.