Designed by Iniyas LTD
மருத்துவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் – ஜிகே.வாசன்
மத்திய, மாநில அரசுகள் மருத்துவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 
இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு பிறகு மருத்துவர்களுக்கு தேசிய உரிமத் தேர்வு என்ற எக்ஷிட் தேர்வை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தான் மருத்துவம் படிக்கின்ற மாணவர்கள் பயில்கிறார்கள். இந்நிலையில் பயிற்சி மருத்துவத்தை முடித்த உடன் தேசிய உரிமத் தேர்வு நடத்தும் முறையை மத்திய அரசு கைவிட வேண்டும்.
நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு விலக்கு அளித்திட மத்திய அரசின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே என்ற நிலையை உத்தரவாதம் செய்திட அகில இந்திய தொகுப்பில் இருந்து வெளிவர தமிழக அரசு சட்ட நடவடிக்கையை எடுக்க முன் வர வேண்டும்.
“எய்ம்ஸ்” மருத்துவமனை தமிழகத்தில் நிறுவப்படும் என்று அறிவித்த மத்திய அரசு அதனை உடனடியாக தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருத்துவ கல்வியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படமால் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இறுதி ஆண்டு மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மறுதேர்வு நடத்திட வேண்டும். தமிழக மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.