தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மறக்கடிக்கப்படுகிறதா நீதி விசாரணை?

038

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கலப்பு விசாரணை அவசியம் என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை. யுத்தம் தொடர்பான விசாரணையை நடத்துவதற்கு சர்வதேச பங்களிப்புடன் விசாரணை ஒன்று அவசியம் என்று கூறியுள்ள மன்னிப்புச் சபை தெளிவான தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது.

அத்துடன் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கக் கூடிய வகையில் விசாரணை பொறிமுறை அமைக்கப்படவேண்டும் என்றும் வெளிப்படையான, நம்பகமான, சுயாதீனமான விசாரணையே தேவை என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியிருக்கிறது. சர்வதேச மன்னிப்புச் சபை இவ்வாறு வலியுறுத்த காரணம் என்ன என்பது அனைவரலாறும் உணரக் கூடியதாக இருக்கும். ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் போக்கும் உலகின் போக்கும் மாறி வரும் சூழ்நிலையில் நீதி விசாரணை மறக்கடிக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

அண்மையில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ள போட்டியில் சர்வதேச விசாரணைக்கு அவசியமில்லை என்றும் உள்ளக விசாரணையே நடைபெறும் என்றும் தேவையானால் வெளிநாட்டு நீதிபதிகளின் ஆலோசனை பெறப்படும் என்றும் கூறினார்.

அத்துடன் ஸ்ரீலங்காவின் பிரதம நீதியரசராக தமிழர் ஒருவரை – ஸ்ரீபவனை எதற்காக நியமனம் செய்தார் என்பதற்கான விளக்கத்தை மைத்திரிபால சிறிசேன அளித்துள்ளார். தமிழர் ஒருவரை பிரதம நீதியரசராக்குவதன் ஊடாக சர்வதேச விசாரணையை தவிர்க்கும் உத்தி குறித்து நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய மணித்துளிகளிலேயே சிறிசேன சிந்திருக்கிறார் என்பதே இதில் புலப்படுகிறது. இது சமத்துவத்தின்பாற்பட்டதல்ல என்பதும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் இனத்தின் நீதியை மறுக்கும் நுட்பமான போரினவாதப் போக்கு என்பதுமே வெளிப்படுகிறது.

இதேவேளை இதுவரையில் இருந்த சர்வதேச சூழலில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராக டுனால்ட் ஜே ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பேரினவாத ஒடுக்குமுறையை ஆதரிக்கும் – முன்வைக்கும் ட்ரம்பின் வெற்றி சிங்களப் பேரினவாதிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பதாகவே தென்படுகிறது. குறிப்பாக போர்க்குற்ற – இனப்படுகொலை விசாரணைகளிலிருந்து தப்பிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மகிழ்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

ஏற்கனவே ஆட்சி மாற்றத்தின் ஊடாக சர்வதேசத்தை வெற்றி கொண்டு விட்டதாக மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்களுக்கு கூறினார். அத்துடன் ராஜபக்சவை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்தும் மின்சாரக் கதிரையிலிருந்தும் தாம் காப்பாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டார். அவர்களுடைய மொழியில் போர்க்குற்ற விசாரணை (தமிழரைப் பொறுத்தவரையில் இனப்படுகொலை)க்கு ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருத்த வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். தன்னை மின்சாரக் கதிரையில் இருத்தப் போகிறார்கள் என்று ராஜபசக்சவும் சொல்லிக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆக, குற்றங்கள் நடந்திருப்பதை ராஜபக்சவும் மைத்திரியும் ஒப்புக்கொள்கிறார்கள். நீதியை பெற வேண்டிய தமிழினத்தை ஏமாற்றும் செயல்களில் ராஜபக்சவும் மைத்திரியும் ஒரே விதமாகவே செயற்படுகின்றனர். ஸ்ரீலங்காவையும் அதன் இனப்படுகொலைக் குற்றத்தையும் பாதுகாத்து புனிதப்படுத்தி – தமிழ் மக்களை ஒடுக்கி அழிப்பதே இருவரதும் திட்டமாகும். அதற்காக உலகத்தை வளைக்கும் நடவடிக்கையில் மைத்திரி ஈடுபடுகிறார்.

இத்தகைய ஸ்ரீலங்கா மற்றும் உலக சூழ்நிலைகளில் – பின்புலங்களில் நீதி விசாரணையை மறக்கடிக்கும் முயற்சிகளை – சூழ்ச்சிகளை ஈழத் தமிழ் மக்கள் முறியடித்து, தமக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியை பெறும் போராட்டத்தை உக்கிரப்படுத்த வேண்டும். தமிழ் தலைமைகள் ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெற்று, நீதியை பெற்று அதன் ஊடாக தமிழ் இனத்தின் விடுதலையையும் இருப்பையும் நிலைநிறுத்த வேண்டும்.

ஆசிரியர்,
செண்பகம்.
13.11.2016

Comments
Loading...