Designed by Iniyas LTD
மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை அமலுக்கு வரும்? – கருணாநிதி விமர்சனம்
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் அமலுக்கு வரும் என்று கேள்வி எழுந்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு எப்போது என்பதிலேயே தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில் முதலீடு பெருமளவு குறைந்திருப்பதாக புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி அவர் குறை கூறியுள்ளார்.
மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை அமலுக்கு வரும்? எப்போது நடைமுறைக்கு வரும் என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கடந்த 4 ஆண்டுகளில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மொத்தம் 5.64 சதவிகித அளவுக்கே செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக கருணாநிதி கூறியுள்ளார். போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், அரசின் தொழிற்கொள்கையும் அணுகுமுறையுமே முதலீடுகள் குறையக் காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வி கண்ட அரசு, கடைசி நேரத்தில் தேர்தல் விளம்பரத்திற்காக ஏற்பாடு செய்துள்ள மாநாட்டின் விளைவுகள் எந்த அளவுக்கு இருக்கும் என்று கருணாநிதி வினா எழுப்பியுள்ளார்.