Designed by Iniyas LTD
மிகவும் பின் தங்கிய நிலையில் முல்லை புதுக்குடியிருப்பு வேணாவில் மக்கள்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேணாவில் கிராமத்திலுள்ள மக்கள் கூலித் தொழிலை நம்பி, மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்வதாக கவலை வெளியிட்டுள்ளனர். வேணாவில் கிராமத்தில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் அண்மையில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டு, வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்டார்.கிராமத்தின் அடிப்படை வசதிகள் பலதும் இல்லாத நிலையானது பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருவதாகவும் அக்கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வீதிகளின் நிலை, பொதுநோக்கு மண்டபம் இல்லாமை, முன்பு இயங்கிய ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது இல்லாதது, இதன் தேவைக்காக 5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கைவேலிப் பகுதிக்கு மக்கள் சென்று வருவது, விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படாமை மற்றும் தமது சங்கத்தில் முதலீடு இல்லாமை போன்ற குறைகளை அச்சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
மக்களால் முன்வைக்கப்பட்ட குறைகளைக் கேட்டுக் கொண்ட வடமாகாணசபை உறுப்பினர், தனது 2016 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டின் மூலம் சங்கத்திற்கு வாழ்வாதாரக்கடன் வழங்கலுக்கான உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அத்துடன், விளையாட்டுக் கழக மேம்பாட்டு உதவி பாடசாலை மாணவர்களுக்கான மிதிவண்டிகள் மற்றும் ஆலய கட்டுமானப் பணிக்காகவும் தன்னாலான ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்கிராமத்தின் வளர்ச்சி பணிகளில் தன்னுடைய பங்களிப்பும் ஒத்துழைப்பும் தொடரும் என்று அச்சந்திப்பில் கலந்து குறைகளை முன்வைத்த கிராமத்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.