தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் போராளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனரா?

tamilini 8ddd

தமிழீழ விடுதலைக்காக களம் சென்ற முன்னாள் போராளிகள் 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் எதிரிகளான சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தார்கள். சிங்கள அரசு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதாக கூறி சிறையில் அடைத்தது. உண்மையில் புனர்வாழ்வு என்பது சிறை தண்டனையே. போராளிகளின் போரிடும் வல்லமையை சமூகப் பார்வையை, இன ஈடுபாட்டை, போர்க்குணத்தை இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையே.

புனர்வாழ்வு என்பது உளவியல் ரீதியான இன அழிப்பு நடவடடிக்கை என்று எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிடுகிறார். போராளிகளின் தொடர் மரணங்கள்திட்டமிட்ட இன அழிப்பு என்ற சந்தேகத்தையும் இவர் தன் பதிவொன்றில் எழுதியிருந்தார். இதேவேளை புனர்வாழ்வுக்குப் பின்னர் இதுவரையில் சுமார் நூற்றுக் மேற்பட்ட போராளிகள் பல்வேறு நோய்காரணமாக இறந்துள்ளதாக பிரான்ஸில் வசிக்கும் பெண்ணிய உளவியல் ஆய்வாளர் தமிழ் ஈழர் பரணி கிருஷ்ணரஜனி குறிப்பிடுகிறார்.

சிங்கள அரசு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் தமிழ் இனத்தை அழித்தொழிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை வெளிப்படையாகவே முன்னெடுத்தது. கட்டாயத் கருத்தடை, வாழ்வியல் சூழலில் ஆபத்துக்களை ஏற்படுத்துதல், நில அபகரிப்பு, பொருளாதார ஒடுக்குமுறை எனப் பல வழிமுறைகளை தமிழ் இன அழிப்புக்கு சிங்கள அரசு கையாண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளீர் பொறுப்பாளர் தமிழினி எனப்படும் சிவகாமி புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டு சில வருடங்களில் புற்றுநோய்காரணமாக இறந்தார். இவரைத் தொடர்ந்து கிளிநொச்சியை சேர்ந்த சிவகௌரி என்ற முன்னாள் போராளியும் புற்றுநோயினால் இறந்தார். இதேவேளை அண்மையில் மாந்தை கிழக்கு பாண்டியன் குளத்தை சேர்ந்த சோமசுந்தரம் டிகுணதாசன் என்ற முன்னாள் போராளியும் புற்றுநோயினால் இறந்தார். இவரது மரணம் தொடர்பான சந்தேகத்தை அச்சம் காரணமாக இவரது பெற்றோர்கள் வெளிப்படுத்த தயங்கியதாக சொல்லப்படுகிறது.

இதேவேளை கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் தமிழ் பாட ஆசிரியராக பாணியாற்றிய தம்பிராஜா சந்திரலதா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சாவடைந்துள்ளார். 37 வயதான சந்திரலதா ஒரு முன்னாள் போராளியாவார். இவர் இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாமில் சில ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு என்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர். முன்னாள் போராளிகளின் புற்றுநோய் மரணங்கள் குறித்த வலுவான சந்தேகத்தை இவரது மரணமும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை முன்னாள் போராளிகள் பலர் புற்றுநோய், சிறுநீரகச்செயலிழப்பு, தோல் நோய்கள், அறியப்படாத மர்ம நோய்கள் போன்றவற்றால் உயிரிழிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வடகிழக்கில் மாத்திரமின்றி தமிழ்நாடு, புலம்பெயர் தேசம் முதலிய நாடுகளுக்கு தப்பிச் சென்ற பின்னரும் இந்த மரணங்கள் தொடர்கின்றன. அத்துடன் போராளிகள்மீது உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் பல போராளிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆக, முன்னாள் போராளிகள் அழிக்கப்பட்டு வருகின்றார்கள் என்ற சந்தேகம் மிகவும் வலுவானதும் ஆராயப்படவேண்டியதுமாகும். தமிழ் இனத்தின் இருப்புக்காக, விடுதலைக்காக, அவர்களின் விடிவுக்காக போராடச் சென்ற போராளிகள் மெல்ல மெல்ல இன்று அழிக்கபடுகிறார்கள். அவர்களை பாதுகாக்க வடக்கு மாகாண சபை மற்றும் தமிழ் தலமைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உன்னத பணியில் புலம்பெயர் உறவுகளும் ஈடுபடவேண்டும்.

தமிழவன்,
செண்பகம்.
14.06.2016

Comments
Loading...