தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யுத்த யாத்திரை …….

   

 யுத்த யாத்திரை
“”””””””””””””””””” “”””””””””””””
முகமாலைப் பாதை பூட்டு
பளையில் இருந்து இடப்பெயர்வு
மன்னார் சனங்களும் ஓடுதாம்!
நிலமிழந்த ஓட்டம்.
ஆகுதி சிந்தி கட்டிய கொத்தளம்
ஆடியாடி ஆட்டம் கண்டது.
கிளிநொச்சியும் அதிர்ந்தது.
கிபிரடி வானதிர்ந்தது.
குண்டடியில் குருதி பாய
கண்முன்னால் உறவிழந்தோம்.
பள்ளிக்கூடங்களும் தப்பவில்லை
கோவில்களும் இடம்நகர்வில்
நீதிமன்றக் கோபுரங்களும் சரிவில்
நிம்மதிக்குறைவோடு
வாழ்வு தந்த வீட்டுக் கூரை பிரித்து
வாசல்காத்த நாயுடனும்
வளம் தந்த கோழி முயல் வாத்துடன்
நாடோடி வாழ்வை நோக்கி
நடைபவணி தொடங்கினோம்.
கடந்து சென்ற செல் கடந்தோம்.
கிபிரின் கந்தக நொடி சுமந்து
பற்றி எரியும் தேசத்தை
பார்த்துப் பார்த்து ஓடினோம்.

பரந்தன் முரசுமோட்டை
தர்மபுரம் நெத்தலியாறு
கடந்து ஓடினோம்
ஆற்றோடு அள்ளுண்டோரை
அவசரமாய் அஞ்சலித்தோம்.
கல்லாற்றில் நல்லிரவில்
வல்லூராய் கிபிர்
குருதி குடித்த வரலாற்றை
கண்கண்ட சாட்சியராய்
உடையார்கட்டை விட்டு
சுதந்திரபுரம் ஒடினோம்.
போன இடமெங்கும் வங்கர் வெட்டி
வங்கருக்குள் பிள்ளை பெற்று
அடுத்த நிமிடமே
மீண்டும் ஓட்டம்.
இரணைப்பாலைக் காட்டுப்பாதை
இரைத்தூதிய உடலங்கள்
வெடித்து நாய் தின்னும் உடல்கள்
கண்டும் ஓடினோம்.
முடிவில்லா ஒட்டம்.
ஒற்றைப்பையுடன் ஓடி ஓடி
வற்றிய வயிற்றின் வலி தீர்க்க
கஞ்சி வாங்க சென்று
காத்திருந்தவர் செல்லடியில்
சிதைந்து போனார்.

ஒட்டி உலர்ந்த தாய்பால் தேடி
அழும் குழந்தை பசி தீர்க்க
சென்றவரும் பலியுண்டார்.
சொல்லெனா துயர்ப்பயணம்.
மே 18
??????????
கும்பலாய் கொட்டிக் கிடந்த
மனித தசைக்குவியல் மிதித்து
குடல் பிரிந்து குருதி உறைந்து
கும்பிட்டுக் கும்பிட்டு கெஞ்சியோர்
கண்ணின் வலி சுமந்து
ஒட்டியுலர்ந்த எலும்புக்கூட்டு
உடல் சுமந்து ஓடி வந்தோம்.
உடலில் உடுப்பிருந்தும்
இல்லாத உணர்வோடு
தலைகவிண்டு முக்காடிட்டோம்.
எட்டி எறிந்த உணவையும்
தண்ணீரையும்
தன்மானமிழந்துண்டோம்.
ஏணிந்த உயிர் கொண்டு
ஓடிவந்த வேதனையும்
மனதை தின்றது.

எலும்புக்கூடுகளாய்
ஏம்பலித்தழுதோம்.
காணாமல் போனோரும்
கணவனிழந்தோரும்
பிள்ளையை இழந்தோரும்
பெற்றோரை இழந்தோரும்
இழந்தோர் வகை பிரிக்க முடியாது
உட்குழிந்த கண்ணீரின் சூட்டை
தாங்க முடியாது தவித்தோம்.

இன்னும் வலிக்கிறது.
இப்பவும் வலிக்கிறது.
கூட்டிப்போங்கோ எங்களையும்
கெஞ்சிக்கேட்ட உறவுகளை
தவிக்க விட்டு தாண்டி வந்தேன்
கடந்து வந்த வலிசுமந்து
இன்னும் சாகிறேன்.

நானென்ன செய்வேன்???
காயப்பட்ட கணவனைச் சுமப்பனோ?
கையில் கைக்குழந்தையை
சுமப்பனோ??
கால்கடுக்குதம்மா என்றழும்
நான்கு வயது மகனைச்
சுமப்பனோ??
ஆனாலும் அழுகிறேன்
என் இயலாமைகளை எண்ணி………?

Comments
Loading...