Designed by Iniyas LTD
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி இரண்டாக உடைந்தது
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி இரண்டாக உடைந்தது. அந்த கட்சியின் 22 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவு தெரிவித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
பீகார் மாநில முதல்–மந்திரியாகவும், மத்திய ரெயில்வே மந்திரியாகவும் பதவி வகித்தவர், லாலு பிரசாத் யாதவ். அவருடைய தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம், வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணியில் இடம் பெற்று இருந்த ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி பா.ஜனதா கூட்டணியில் சேர முடிவு எடுத்துள்ளது. இது லாலு கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், லாலு பிரசாத் கட்சியில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர், அந்த கட்சியில் இருந்து விலகி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி இரண்டாக உடைந்துவிட்டது.
லாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள 13 எம்.எல்.ஏ.க்களும் நேற்று சம்ரத் சவுத்ரி எம்.எல்.ஏ. வீட்டில் கூடி இந்த முடிவை எடுத்தனர். பின்னர் தங்கள் முடிவு குறித்து சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரிக்கு அவர்கள் கடிதம் அனுப்பி வைத்தனர். அந்த கட்சியை சேர்ந்த ஜாவீத் இக்பால் அன்சாரி இந்த தகவலை உறுதி செய்தார்.
லாலு பிரசாத் கட்சியில் இருந்து விலகும் 13 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள். தங்கள் விலகல் முடிவு குறித்து பின்னர் நிருபர்களிடம் பேசிய சம்ரத் சவுத்ரி, தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய காங்கிரஸ் கட்சியின் ‘பி’ அணியாக கட்சியை லாலு பிரசாத் மாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார்.
கட்சியில் இருந்து விலகிய மற்றொரு எம்.எல்.ஏ.வான ஜாவீத் இப்பால் அன்சாரி கூறும்போது, பா.ஜனதாவுடன் உறவை துண்டித்ததன் மூலம் நரேந்திரமோடி போன்ற வகுப்புவாத தலைவரை எதிர்த்து போராட உறுதி பூண்டுள்ள முதல்–மந்திரி நிதிஷ்குமாருக்கு பாராட்டு தெரிவித்தார். நிதிஷ்குமாரின் கரங்களை வலுப்படுத்த ஐக்கிய ஜனதா தளத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சேருவார்கள் என்றும் அவர் சூசகமாக தெரிவித்தார்.
சம்ரத் சவுத்ரி, தனது தொகுதியில் நடைபெற்ற விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முதல்–மந்திரி நிதிஷ்குமாருடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் கூறும்போது, லாலு பிரசாத் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேருவதை விட தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிடலாம் என்றும் தெரிவித்தார். இவர் லாலு பிரசாத் கட்சியின் தலைமை கொறடாவாகவும் பதவி வகித்து வந்தார்.
லாலு கட்சியின் சட்டமன்ற கட்சித்தலைவரான அப்துல்பாரி சித்திக், முன்னாள் மந்திரி ராகவேந்திரபிரதாப்சிங் போன்ற மூத்த எம்.எல்.ஏ.க்கள் சிலரும் ஐக்கிய ஜனதா தளத்துடன் தொடர்பு கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்துல் பாரி சித்திக், மற்றும் சம்ரத் சவுத்ரி இருவரும் போட்டியிட முடிவு செய்து இருந்த பாராளுமன்ற தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட இருப்பதால், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து அவர்கள் அந்த தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
மொத்த எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் (அதாவது 15–க்கு மேல்) அதிருப்தி அணியில் சேர்ந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜனதாவுடன் உறவைத் துண்டித்த பிறகு நிதிஷ்குமார் அரசுக்கு தேவையான முழுமையான பெரும்பான்மை (122 எம்.எல்.ஏ.க்கள்) பலம் இல்லை. தற்போது 13 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க முன்வந்து இருப்பதன் மூலம் 238 உறுப்பினர்களைக்கொண்ட பீகார் சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளத்தின் பலம் 128 ஆக உயர்வதால் நிதிஷ்குமார் அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும்.
ஐக்கிய ஜனதா தளத்துக்கு தற்போது சபாநாயகர் உள்பட 116 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டு எடுப்பின்போது வெற்றி பெற்ற நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக, காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள், 4 சுயேச்சைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஒருவர் ஆகியோர் வாக்களித்து இருந்தனர்.