Designed by Iniyas LTD
வங்காள தேசத்தில் 15 இந்து கோவில்கள் இடித்து அழிக்கப்பட்டன
வங்காள தேசத்தில் 15 இந்து கோவில்கள் இடித்து அழிக்கப்பட்டன. இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசம் மத சார்பற்ற ஐனநாயக நாடாக உள்ளது.
இங்கு இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்து கோவில்கள் இடித்து அழிக்கப்படுகின்றன. அத்தகைய சமூக விரோதிகள் மீது வங்காள தேச அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருந்தும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
இந்த நிலையில் பிரம்மன் பார்கியா மாவட்டம் நசீர் நகரில் நேற்று 100 இந்துக்களின் வீடுகளில் புகுந்து ஒரு கும்பல் கொள்ளையடித்தது. அதை ஒட்டியுள்ள ஹபிக்ஞச், மதாபூர் ஆகிய இடங்களில் 2 இந்து கோவில்களை இடித்தனர். அங்கு தங்கியிருந்த பூசாரிகள் தாக்கப்பட்டனர். அதில் அவர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தகவலை இந்து இளைஞர் ராஸ்ராஜ்தாஸ் ‘பேஸ்புக்‘ இணைய தளத்தில் வெளியிட்டார். ஹரின்பெர்க் கிராமத்தை சேர்ந்த இவர் இடித்து சேதப்படுத்தப்பட்ட கோவில்களின் போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து அவர் மத அவமதிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மத உணர்வை தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது சமாதான பேரணி நடத்தப்பட்டதை தொடர்ந்து நசீர் நகரில் அமைதி நிலவுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வங்காள தேசத்தில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட கோவில்கள் இடித்து அழிக்கப்பட்டதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.