Designed by Iniyas LTD
வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் – பொ. ஐங்கரநேசன்
வடக்கில் அண்மைக்காலமாகப் பல தனியார் நிறுவனங்கள் புதிய பயிரினங்களை விவசாயிகளிடையே அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிறுவனங்களின் நம்பகத்தன்மையைத் தெரிந்து கொள்ளாமல், வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

எழுதுமட்டுவாழ் பிரதேச கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.04.2016) நடைபெற்றது. எழுதுமட்டுவாழ் ஸ்ரீகணேச வித்தியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் உரையாற்றும்போதே அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் உரையாற்றும்போது, யாழ்ப்பாணத்தில் இஞ்சி வளர்ப்பை அறிமுகம் செய்த தனியார் நிறுவனம் ஒன்றால் தாங்கள் இலட்சக்கணக்கான ரூபாய்கள் நட்டம் அடைந்திருப்பதாக பல விவசாயிகள் எங்களிடம் முறையிட்டுள்ளனர். நட்டஈட்டைப் பெற்றுத் தருமாறு கோரி ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் கடிதங்கள்கூட அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை எங்களுடைய விவசாயிகள் தவிர்த்திருக்கமுடியும். யுத்தத்திற்குப் பிறகு அபிவிருத்தி என்ற பெயரில் பல தனியார் நிறுவனங்கள் சந்தனமரம், இஞ்சி என்று பல புதிய பயிர்களை அறிமுகம் செய்து வருகின்றன. புதிய பயிரினங்களை அறிமுகம் செய்யும்போது முதலில் அவை எமது பிரதேசத்துக்குப் பொருத்தமானவையா என்று தீர்மானிக்க வேண்டும். இஞ்சி வளர்ப்பில் விவசாயிகளை ஈடுபடுத்திய தனியார் நிறுவனம் விவசாயிகளுக்கு முழங்காவிலிருந்து மண்ணை எடுத்து வந்து கொடுத்திருக்கிறது. பெரும்பாலும், விவசாயத் திணைக்களத்தின் கவனத்துக்கு வராமலேயே இவை இடம்பெறுகின்றன. அதிக இலாபம் கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி எமது விவசாயிகளும் இவற்றில் முதலீடு செய்கிறார்கள். கடைசியில், இலவு காத்த கிளியாக ஏமாறும்போதே நட்ட ஈட்டைப் பெற்றுத்தருமாறு கோரி எங்களிடம் வருகின்றார்கள். இது தொடர்பாக நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டால் எங்களை அபிவிருத்திக்கு எதிரானவர்களாகச் சமூகத்துக்குக் காண்பிக்கும் முயற்சியில் அந்நிறுவனங்கள்ஈடுபடுகின்றன.

தனியார் நிறுவனம் ஒன்றில் எமது விவசாயிகள் இஞ்சியில் பெரும்பணத்தை முதலீடு செய்வது தெரிய வந்த உடனேயே எமது விவசாயத் திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு ஊடகங்களின் மூலம் கேட்டிருந்தார்கள். இப்போதும் அதே நிறுவனம் தங்களிடம் காளான் செய்கையில் முதலீடு செய்யுமாறு விவசாயிகளைக் கேட்டுவருகிறது. இஞ்சி, காளன் செய்கை தொடர்பாக எமது விவசாயத் திணைக்களம் எவ்வித கட்டணங்களும் இல்லாமல் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இலவசமாக நடுகைப் பொருட்களையும் வழங்கிவருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதி விவசாயப் போதனாசிரியரின் ஆலோசனைகளைப் பெற்றே புதிய பயிரினங்களில் முதலீடுகளைச் செய்ய முன்வரவேண்டும்.

தனியார் நிறுவனங்களின் நம்பகத் தன்மையைத் தெரிந்து கொள்ளாமல், வாக்குறுதிகளை மட்டும் நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.இந் நிகழ்ச்சியில் எழுதுமட்டுவாழ் விவசாயிகள் எதிர்நோக்கும் குரங்குத் தொல்லை, விவசாய வீதிகள் இல்லாமை, ஒட்டுவெளி வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன. இதன்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், உதவிக்கல்விப் பணிப்பாளர் க.அருந்தவபாலன், பிரதிக் கல்விப்பணிப்பாளர் அ.அகிலதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.