Designed by Iniyas LTD
வித்தியாவின் படுகொலையால் ரணகளமாகும் யாழ்ப்பாணம்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை தடுக்கும் விதமாக நாற்சந்தியில் ரயர்கள் கொளுத்தப்பட்டன. இதனால் குறைந்தளவு மக்களே பயணித்த போதும் அவர்களின் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது. காலையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை இன்று யாழ்ப்பாணம் முழுவதும் வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்காது எனத் தெரியவருகிறது. தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழ் ஆசிரியர் சங்கம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதேபோன்று வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்று ஒரு மணிநேர புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளன.
அத்துடன், புங்குடுதீவு மகாவித்தியாலய பாடசாலை மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்தும் அப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கொலைச் சந்தேகநபர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் முன்னிலையாகக்கூடாது என்பதை இறுக்கமாக தெரிவிக்கும் வகையிலும் யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதேபோன்று கொக்குவிலில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதைவிட மாணவி படுகொலையை எதிர்த்து யாழ். மாவட்ட இளைஞர் கழகம் யாழ். நூலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. மேலும் யாழ்.மாவட்ட தனியார் பேருந்துகள், அரச பஸ்கள் என்பனவும் சேவையில் ஈடுபடாது புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.