Designed by Iniyas LTD
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் உணவுதவிர்ப்புப் போராட்டம் முடிவுற்றது
கடந்த மூன்று நாள்களாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்ட தாரிகளால் நடத்தப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வழங்கிய உறுதி மொழியை அடுத்து நேற்று முடி வுக்குக் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு. உதயவேந்தன் தெரிவித்ததாவது,
எதிர்வரும் பங்குனி மாதம் 31ஆம் திகதிக்குள் மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய திணைக்களங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதி வழங்கியுள்ளார். அவர் வழங்கிய உறுதிமொழிக்கேற்ப உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுகிறோம். வேலை வாய்ப்பு கிடைக்கும் வரையில் ஞாபக மூட்டலுக்காக ஒவ்வொரு மாதமும் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
35 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிர்வாக உதவியாளர்கள் வெற்றிடங்கள் உள்ள இடங்களில் வேலைவாய்ப்பு, கிழக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு நியமனம், தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு வேலை வழங்கல், கோட்டா முறையில் வேலை வாய்ப்பை தவிர்த்தல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, இரா. துரைரத்தினம், ஞா. கிருஸ்ண பிள்ளை, எம். இராஜேஸ்வரன், மா. நடராசா ஆகியோர் உடனிருந்தனர்.