தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டதே வருவாய் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்

கடந்த 2009ம் ஆண்டில், தமிழக அரசு மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலை மீறி, மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ததால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 254 கோடியே 8 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.download (1)

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மின் உற்பத்தியாளர்களும், உற்பத்தி செய்த மொத்த மின்சாரத்தையும் தமிழகத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டுமென, 2009 பிப்ரவரியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், மின் உற்பத்தியாளர்கள் மின்சாரத்தை வணிகர்களுக்கு விற்கலாம் என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பின்னர் முடிவு எடுத்ததாகவும், இது முந்தைய அரசாணைக்கு முரண்பட்டதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகர்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படும் நிலையில் இருந்த போதே, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான கட்டணப் பட்டியலை ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் 80 காசுகள் முதல் 3 ரூபாய் 83 காசுகள் என்ற அளவில் திருத்தி அமைத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கட்டண முறையை பின்பற்றாமல், வணிகர்கள் மூலம் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 74 காசு முதல் 6 ரூபாய் 75 காசு என்ற அளவில் கொள்முதல் செய்ததால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த நியாயமான விலையை விட அதிக விலை தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மின்பகிர்மான கழகத்திற்கு 254 கோடியே 8 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2008ம் ஆண்டு 7 ஆயிரத்து 771 கோடியே 39 லட்சம் ரூபாயாக இருந்த மின் பகிர்மான கழகத்தின் வருவாய் பற்றாக்குறை, 2012-13ம் ஆண்டு இறுதியில் 11 ஆயிரத்து 679 கோடியே 7 லட்சம் ரூபாயாக உயர்ந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சொந்த உற்பத்தி மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாததால், தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டதே வருவாய் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்றும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...