Designed by Iniyas LTD
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் நிறைவேறியே தீரும்?
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டாலும் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மாகாண சபைகளின் கருத்துக்களை அறிவதற்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசாங்கம் இதனை நிறைவேற்றுவதற்கு மாகாண சபைகளின் கருத்துக்கள் அவசியமில்லையென்றும் தெரிவித்தார்.
ஐ.தே.க தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த சட்டமூலமானது ‘விசேட அமைச்சர்’ ஒருவரை உருவாக்காது. ஆனால் முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலகுவான சூழ்நிலையொன்றை ஏற்படுத்திக் கொடுக்கும்.
மஹாவலி திட்டம், கல் ஓயா திட்டம் மற்றும் கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழு ஆகிய திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இதுபோன்ற சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருந்தது.
நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தமது ஒத்துழைப்பை வழங்க மாகாண சபைகள் விரும்பவில்லையாயின். மத்திய அரசாங்கம் நேரடியாக இதனை அமுல்படுத்தும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்பொழுது விவாதத்துக்கு உள்ளாகிவரும் சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும்போது அதில் திருத்தங்களை உள் வாங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர் தேசிய அரசாங்கத்துக்கு எதிராக சதியில் ஈடுபட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின்பண்டார, கவிந்த ஜயவர்த்தன மற்றும் ஹெக்டர் அப்புகாமி ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தச் செயற்பாட்டுக்கு மாகாண சபைகளின் முதலமைச்சர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாகாணசபை உறுப்பினர்களும் பங்களிப்புச் செலுத்துகின்றனரா என்ற சந்தேகமும் காணப்படுவதுடன், கூட்டு எதிரணி உறுப்பினர்களும் உதவிசெய்து வருகின்றனர் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.