Designed by Iniyas LTD
அருணாசல் புதிய முதல்வராக பெமா காண்டு இன்று பதவியேற்பு
அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் தாய்க்கட்சிக்குத் திரும்பினர். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக் காங்கிரஸ் குழு புதிய தலைவராக பெமா காண்டு (37) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருணாசலப் பிரதேசத்தில் முதல்வர் கலிகோ புல் தலைமையிலான அரசு, சட்டவிரோதமானது என்று அண்மையில் அறிவித்த உச்ச நீதிமன்றம், அங்கு நபம் துகி தலைமையிலான அரசை மீண்டும் ஏற்படுத்தி உத்தரவிட்டது.
இதையடுத்து, முதல்வர் நபம் துகியிடம் சனிக்கிழமையன்று பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி ஆளுநர் (பொறுப்பு) ததாகத ராய் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், பேரவையில் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் நிகழ்ந்தன. நபம் துகி, பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியையும், மாநில முதல்வர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.
அத்துடன், உச்ச நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியை இழந்த கலிகோ புல் தலைமையில் 30 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் காங்கிரஸ்க்கே திரும்பினர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில், மறைந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் மகன் பெமா காண்டு சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில் கலிகோ புல் உள்பட 44 எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர். எனினும், சட்டப்பேரவைத் தலைவர் நபம் ரேபியா கலந்து கொள்ளவில்லை.
பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் பதவிக்கு பெமா காண்டுவின் பெயரை நபம் துகி முன்மொழிந்ததால், அவரை புதிய தலைவராக அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்றுக் கொண்டனர். இதன் மூலம், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாளிப்பதில் காங்கிரஸ் கட்சி வெற்றி கண்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை: இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நபம் துகி, “பேரவை காங்கிரஸ் குழுவின் புதிய தலைவராக பெமா காண்டு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பில்லை” என்றார்.
ஆட்சி அமைக்க உரிமை’:
பெமா காண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரு சுயேச்சைகள் உள்பட 47 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதன் அடிப்படையில், ஆளுநர் ததாகத ராயிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளேன்.
எனது கோரிக்கை குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதாக அவர் கூறியுள்ளார்’ என்றார்.
இதனிடையே, பெமா காண்டு முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
60 எம்எல்ஏ-க்களைக் கொண்ட அருணாசலப் பிரதேச சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 11 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.
சட்டப்பேரவைத் தலைவர் நபம் ரேபியா மற்றும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள், இரு சுயேச்சைகளின் ஆதரவு ஆகியவற்றை சேர்த்து காங்கிரஸ் கட்சியின் பலம் 47-ஆக உள்ளது.
யார் இந்த பெமா காண்டு?
அருணாசலப் பிரதேச சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெமா காண்டு, கடந்த 2011-ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அந்த மாநில முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் மகன்.
37 வயதாகும் பெமா, தில்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரியில் பட்டப்படிப்பு பயன்றவர். கடந்த 2000-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். தனது தந்தையின் மறைவால் காலியான முக்டூ (எஸ்.டி.) தொகுதியில், 2011ஆம் ஆண்டில் போட்டியின்றி எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பெமா. பின்னர், மாநில நீர்வளம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் முக்டூ தொகுதியில் அவர் போட்டியின்றி மீண்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸின் உள்விவகாரம்: கிரண் ரிஜிஜு
அருணாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவராக பெமா காண்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, அக்கட்சியின் உள்விவகாரம் என்று மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: அருணாசலப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு பாஜகவும், மத்திய அரசும் பொறுப்பாக முடியாது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே ஒற்றுமை நிலவாததால், கடந்த 7 மாதங்களாக மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவி வந்தது. பதற்றமான மற்றும் முக்கியமான மாநிலமான அருணாசலில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட வாழ்த்துகள் என்றார் கிரண் ரிஜிஜு.