Designed by Iniyas LTD
இன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற உள்ளது
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இரவு 08.00 மணியளவில் குறித்த கூட்டம் நடைபெற உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேர்
இந்தக் சந்திப்பிற்கு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாட உள்ளதாகவும், தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வது கட்டாயம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன கூறியுள்ளார்.
நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன இதனை கூறியுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு புதிய தோற்றத்துடன் அரசாங்கத்தை நடத்திச் செல்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.