தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இயற்கை எரிவாயு வயல்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் – கேஜ்ரிவால்

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா – கோதாவரி ஆற்றுப்படுகையில் ஏராளமான இயற்கை எரிவாயு வளம் இருப்பதை மத்திய அரசு கண்டுபிடித்தது. அந்த இயற்கை எரிவாயுவை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து எடுத்து, அவற்றை விற்கும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தது.

இந்தியாவின் நம்பர்–ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கிருஷ்ணா, கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கும் உரிமத்தைப் பெற்றுள்ளது. முதலில் ஒரு யூனிட் இயற்கை எரிவாயு விலை 2.3 அமெரிக்க டாலராக நிர்ணயம் செய்யப்பட்டது. பிறகு அது 4 டாலராக உயர்ந்தது.

சமீபத்தில் மத்திய அரசு அந்த விலையை 8 டாலராக உயர்த்த சம்மதித்தது. அதோடு கிருஷ்ணா – கோதாவரி பகுதியில் அடுத்த 17 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு எடுக்கும் உரிமத்தையும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது.இயற்கை எரிவாயு

அம்பானி நிறுவனம் எடுக்கும் இயற்கை எரிவாயுக்கு விலை நிர்ணயம் செய்ததில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால் மத்திய அரசு அந்த குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்து வந்தது.

இந்த நிலையில் இந்த முறைகேடு புகார்களை டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கையில் எடுத்துள்ளார். இன்று காலை டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த கெஜ்ரிவால் இதுதொடர்பாக கூறியதாவது:–

எனது அரசில் உள்ள 4 மூத்த நபர்கள் ரிலையன்ஸ் நிறுவனம் மீது புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் இயற்கை வளத்தை சுரண்டி கொள்ளை லாபம் சம்பாதிப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிருஷ்ணா – கோதாவரி ஆற்று படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கும் ஒப்பந்தம் பெற்றுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் பல முறைகேடுகளை செய்துள்ளது. ஒரு யூனிட் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு ஒரு டாலருக்கு குறைவாகவே செலவிடப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனத்துக்கு ஒரு யூனிட்டுக்கு 4 டாலர் கொடுக்கிறார்கள்.

இதற்கிடையே 18 சதவீத எரிவாயுவே கிடைப்பதாக கூறி ரிலையன்ஸ் நிறுவனம் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் முதல் ஒரு யூனிட் எரிவாயுவுக்கு 8 டாலர் என அவர்கள் விலை நிர்ணயம் பெற்றுள்ளனர். இந்த விலை நிர்ணயத்தில் அம்பானிக்கு ஆதரவாக மத்திய மந்திரிகளும் உள்ளனர்.

எரிவாயு மீதான இந்த விலை நிர்ணயத்தால் நாட்டு மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். ஆனால் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.54 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்கும். மத்திய கணக்கு தணிக்கைத் துறையும் இந்த முறைகேட்டை உறுதி செய்துள்ளது.

எனவே மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி வீரப்ப மொய்லி, இத்துறையின் முன்னாள் மந்திரி முரளி தியோரா, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் அதிகாரி வி.கே.சிபல் உள்பட ரிலையன்ஸ் அதிகாரிகள் 2 பேர் மீது டெல்லி மாநில அரசு கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும். டெல்லி அரசின் ஊழல் ஒழிப்புத்துறை சார்பில் இதற்கான எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும்.

இயற்கை எரிவாயு விலை நிர்ணயத்தில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி பிரதமருக்கு டெல்லி மாநில அரசு சார்பில் கடிதம் எழுதப்படும். அதில் கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையில் உள்ள இயற்கை எரிவாயு வயல்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்படும்.

மேலும் இதுதொடர்பான விசாரணை முடியும் வரை இயற்கை எரிவாயுக்கான விலை உயர்வு நிர்ணயத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதப்படும் கடிதத்தில் வலியுறுத்தி கூறப்படும்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு மத்திய அரசு அதிகாரிகளிடமும் ரிலையன்ஸ் அதிகாரிகளிடமும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இயற்கை எரிவாயு வளம் ஆந்திர கடலோரத்தில் உள்ளதால் டெல்லி அரசால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியாது. வேண்டுமானால் புகாரை வாங்கி பதிவு செய்யலாம் வேறு எதுவும் செய்ய முடியாது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இதை கெஜ்ரிவால் மறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ரிலையன்ஸ் நிறுவனம் எடுக்கும் இயற்கை எரிவாயுக்கு டெல்லியில்தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதனால் இங்கு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘ரிலையன்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு கூறிய 4 பேரும் முக்கியமானவர்கள். ஒருவர் முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம், மற்றொருவர் முன்னாள் கடற்படை தளபதி காமினி கெய்ஸ்வால்.

முன்னாள் செலவுத்துறை செயலாளரும் இந்த முறைகேடுகளை பற்றி சொல்லியுள்ளார். எனவே இந்த ஊழலை ஒழிக்கவும் ஊழல்வாதிகளுக்கு பாடம் புகட்டவும் நாடெங்கும் உள்ள நேர்மையாளர்கள் ஒன்றிணைய வேண்டும்’’ என்றார். கெஜ்ரிவாலின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டுக்களை மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘நிபுணர் குழு கொடுத்த அறிவுறுத்தலின் பேரில்தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயற்கை எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் நடக்கவில்லை’’ என்றார்.

Comments
Loading...